காக்காத கடவுளுக்கும்
கவர்ச்சி காட்டும் திரைப்படத்துக்கும்
கடல் அலையென திரள்வான்
கவன ஈர்ப்பு என்றாலும்
கண்டனப் போராட்டம் என்றாலும்
கண்மூடிச் செல்வான்
துக்க நிகழ்வில் தொடங்கி
மகிழ்வான நிகழ்வு வரை
மது இல்லாமல்
மற்றது கிடையாது என்று
மயக்கிக் கிடப்பான்
இனத்தின் இழவுச் செய்தியை
இடித்து எடுத்துரைத்தால்
இளகிய மனம் படைத்தவன் நான் என்பான்
இதயம் பலகீனம் சொல்லாதே என்பான்
மொக்கை போடாதே என்பான்
நாட்டின் விடிவைப் பேசுவோரை
நையாண்டி செய்பவர்களை
நடுச் சாலையில் இழுத்து
நையப்புடைக்க கோபம்தான்
அறியாமையில் இருப்போரை
அடித்தென்ன லாபம்?
அறிவை அவர்களுக்கு ஊட்டி
அதட்டி உசுப்பிவிட வேண்டும்
சேவல் கூவிதான் விடியும் என்பதில்லை
விடிவதென்பது நிரந்தர நிகழ்வு
நான் கூவும் அந்தச் சத்தம்
உறங்குபவனை எழுப்பிவிட வேண்டும்
எம்மினத்தின் நிலையை அவன் உணர வேண்டும்
பட்டால் தான் தெரியும் என்பர்
மரத்தின் ஒருக்கிளை பட்டு
வெட்டி வீழ்த்தப்படும் போது
மறுகிளையின் இளம் இலைகளுக்கு
அதன் வலி தெரியவில்லையே
ஊரோடு சேர்ந்து வாழ் என்பர்
ஊரே சேறாக இருக்கும்போது
உண்டு சேர்ந்தெப்படி வாழ்வது?
அதற்காக விட்டுச் செல்லவும் முடியாது
எமது ஊரை நாமே சுத்தப்படுத்த வேண்டும்
