ஈர் மறுகாலும்
மூன்று மதகையும்
‘ட’ போன்ற வடிவில்
கரையையும் உடையவள்
மழைநீர் திருடிவந்த
மண்துகள்களை
தனக்குச் சொந்தமாக்கி
பட்டாப் போட்டு
படிய வைத்துக் கொள்வாள்
இந்த சிறுக்கி
கண்ணுக்கெட்டிய தூரம்வரை
காடு வயலெல்லாம்
பச்சை பாவடை தாவணி அணிய
பாய்ந்து வருபவள்
இந்த மேனா மினுக்கி
கட்டுப்பாட்டில் இருக்கும்
காணிகளுக்கு தண்ணீர் தருவதுடன்
கடந்து கிடக்கும்
காடு வயல்களுக்கும்
கரம்பை மண் தருபவள்
பானை அடுப்பு செய்து
பசியாற நினைப்பவனுக்கு
பச்சை களிமண்ணளிப்பவள்
சிறுவர்கள் நீச்சல் பழகவும்
தூண்டிலிட்டு மீன் பிடிக்கவும்
தன்னையே தாரைவார்த்துக் கொடுத்தவள்
இயற்கை அவன் கூத்தை
இவள் மேல் அரங்கேற்றிவிட்டான்
இழுத்து ஈர்க்கும் அழகுக்காரி
இப்போது இடுப்பொடிந்து கிடக்கிறாள்
பாதெல்லாம் வரும் பித்தவெடிப்பு-இவள்
தேகமெல்லாம் வெடித்திருக்கிறது
மேகம்
மருந்தளிப்பானா?இல்லை
மறுத்தளிப்பானா?
