இரசனை பசியோடு வந்த விருந்தாளிகளை வருக வருக வருக என்று வரவேற்று என்னுடைய கவிதையை பரிமாறி உங்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது உங்கள் அன்பின் வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்!

அந்த ஒருத்தி





















அவளைப் பார்த்த
அடுத்த நொடியில்
எனது இமைகள்
செயலிழந்த தருணம்

ஆள் தின்னும் மீனல்ல
ஆளைத் தின்னும் மீனுமல்ல
ஆணைத் தின்னும் மீன்தானே
அவளின் கண்கள்

முத்துக்களைக் காட்ட
உதட்டுக் கதவைத் திறந்தாள்
அவள் முதல் சிரிப்பு
எனக்கு ஒருவகைச் சிலிர்ப்பு

அவளுடைய 
ஒத்தச்சடை,
ஓரக்கண் பார்வை,
உதட்டோர சிரிப்பு,
இவையெல்லாம்
இன்னும் இருக்கிறது,
எனது நினைவுப் பெட்டகத்தில்

அவளுக்கு நான்
அளித்த முதல் பரிசு,
இரண்டு முழம் மல்லிகை பூ
அன்று,
அப்பூ அவள் தலைமுடியில்
சிக்கி வாடியது

இன்று
எனக்குள் அவள் நினைவு சிக்கி,
என்னை வாட்டுகிறது.

அவளால் தூக்கி
எறியப்பட்டேன்
கவிஞனின்
கவிதை முயற்சியில்
காயமடைந்த
காகிதத்தைப் போல

அவளுக்காக வாங்கி வைத்த
கண்ணாடி வளையல்கள்,
உடைந்தது சுக்குநூறாக
என் இதயத்துடன் சேர்ந்து

கண்கள் கலங்குகிறது.
கல்யாணம் செய்து,
கையசைத்துப் போனவளை
நினைத்து

கண்ணீரைத் துடைத்த
கைக்குட்டையும்
காயவில்லை
என்றுமே உலராத
அவள் உதடுகளைப் போல

வாலிபத்தில் எடுத்த குறும்படம்,
வாழ்க்கை முழுவதும்
ஓடிக்கொண்டிருக்கிறது
தொடர்கதையாக

தன்னைத் தேய்த்துக் கொண்டே
எழுத்துக்களை
அழிக்கும் அழிப்பான் போல,
கல்லீரலை கருக்கிக் கொண்டே
கனவுகளை
கரைக்கின்றேன்

காலத்துடன் சேர்ந்து
நானும் ஓடிக்கொண்டிருக்கிறேன்
என்னவள் சென்ற திசைக்கு
எதிர் திசையில்
இனி,
இந்த யுகத்தில்
அவளுடன் சேரமுடியாது