கொத்துக் கொத்தாய்
மாண்டது போதுமடா...
கொலை வெறியர்களின்
கொக்கரிப்புத் தீரலடா...
இறந்தவர்களின் எண்ணிக்கை தெரியலடா...
இன்னும் இனவெறியர்களுக்கு
இரத்த வாடை கேக்குதடா...
உயிர் காக்கத் தோண்டிய
குழிகள் எல்லாம் சமாதிகள் ஆனதடா...
தமக்கைகள் கன்னிப் பருவமடா...
தமிழச்சி கற்புப் பறிபோனதடா...
வீரப்பால் ஊட்டிய
தமிழ்த்தாயின் மார்புகள் தொங்குதடா
சிங்களவனின் கழுத்தில் மாலையாக...
வீரம் விளைந்த மண்ணடா...
விருந்தோம்பல் தமிழரின்
தலைசிறந்த பண்படா...
வந்தாரை வாழவைத்த இனம்,
இன்று ஒருவேளை கஞ்சிக்கு வாடுதடா...
கன்னத்தில்
பணக்குழி விழுந்த இடம்,
பள்ளமாய் ஆகுதடா...
விம்மி அழ முடியலடா,
விழி பிதுங்குதடா...
சொல்லி அழ தோணுதடா,
கேட்க நாதி இல்லையடா...
நாங்கள் நம்பிய நாடும்
காப்பாற்ற வில்லையடா...
வணங்கிய தெய்வங்களும்
காப்பாற்ற வில்லையடா...
நாங்கள் கும்பிட்ட தெய்வங்களே,
எங்கட சனம் சாகயிலே
எங்கடா போனீர்கள்?
ஸ்ரீரங்கநாதரே,
படுக்கையிலே தூங்கி விட்டாயடா?
தமிழ்க் கடவுளே,
தாரங்களுடன் சேர்ந்து
தன்நிலை மறந்தாயடா?
சிவ பெருமானே,
எங்கட சுத்துவட்டாரம்
சுடுகாடானதும்
சுறுசுறுப்பாய் சாம்பல்
தின்ன வந்தாயடா?
பாராட்டுவிழா எடுத்துக் கொள்ளும்
பாசத்தலைவர்களே!
கடவுள் இல்லையென்று
சொல்லும் வேஷதாரிகளே!!
எங்களை நம்ப வைத்து
கொன்றது போதுமடா...
இப்போது,
மேற்கண்ட வரிகளுக்கு
மார்தட்டி கொள்ளுங்களடா...
