பேச்சில் ஒரு காந்தம்
கண்கள் பேசும் பாசம்
உரிமையோடு கேலிபேச்சு
வசந்தத்தின் வாசம்
வசந்தா அத்தை
அலுவலகம் செல்லும் வேலை
அழைப்பு வந்தது
கைபேசி
காதை அடைத்தது
அது சொன்ன சேதியோ
நெஞ்சை அடைத்தது
கொழுந்துவிட்டு எறிந்த
பாசத் தீபத்தை காலம்
அணைத்துவிட்டது
விண்ணில்
நட்சத்திர பூ ஒன்று
உதிர்ந்து விட்டது.
பயணம்...
நெடுந்தூரப் பயணம்...
பேருந்தில்
கண்களுக்குள் சிறைபட்ட
கண்ணீர் தப்பிக்க முயற்சித்தது.
காவலுக்கு
புத்தகத்தை அழைத்தேன்.
ஊரில் இறங்கினேன்
சாலையெங்கும்
உதிர்ந்த பூக்களோ
இறுதி ஊர்வலம்
முடிந்த செய்தியைச் சொல்லியது.
வீடு சென்றேன்
எல்லாம் அழுது
ஓய்ந்த முகங்கள்..
கடைசி ஒருமுறை பார்க்க
அத்தையின் ஆசை முகம் தேடினேன்
அந்தி மசங்கும் முன்
அடக்கம் செய்துவிட்டார்களாம்
தங்க திருமேனியை
தரைக்குள்
புதைத்து விட்டார்களாம்
காலம் போனாலும்-நீ
காலமானாலும்
அன்பு அலைகள் ஓயாது-உன்
நினைவு ஓட்டம்
நீங்காது...
