இரசனை பசியோடு வந்த விருந்தாளிகளை வருக வருக வருக என்று வரவேற்று என்னுடைய கவிதையை பரிமாறி உங்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது உங்கள் அன்பின் வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்!

மழை பெய்யட்டும் வயிறு காயட்டும்


















குத்த வச்சதுமே 
குடுச கட்ட வந்தவருக்கு
கைபுடுச்சு குடுத்தாக
பட்டாட உடுத்தி
பல்லிடுக்குல பீடிக்குச்சி வச்சு
பத்தவச்சு-எம்
புருசன்
பஞ்சாயத்து பண்ண போயிருவாக

ஒறங்கும் போது சொல்லிவச்சேன்
ஒழக்கு அரிசி இல்லாதப்ப
ஊர் வம்பு நமக்கெதுக்கு
உடலுல ஏது தெம்பிருக்கு

வாக்கப்பட்டு வந்த
நாளு மொதலா
ஒருவேள(ளை) கஞ்சிக்கு
ஒரு பாட்டு
நான் செஞ்ச வேல(லை)தான்
எம்பூட்டு

வாய்க்கா தண்ணி குடுச்சு
வயித்த இழுத்துக் கட்டி
நடையா நடந்தாக்க
நாலு தட்டு சாணி சேரும்

சேலையத்தான் இழுத்துகட்டி
உருட்டி உருட்டி
வரட்டி தட்டி
காயப்போட்டு எடுத்தாதான்
கையில கொஞ்சம் காசு வரும்

எப்பாடு பட்டாவது
எம்புள்ளக படிக்க வைக்கனுமுன்னு
நெனச்சேன்
அதுக்கு தோதில்ல
எரு தட்ட ஆளில்ல

கண்ணாடி வள(ளை)யல் சிணுங்கக் கேட்டு
பொட்டப்புள்ள ரெண்டும் சிணுங்குதுக
என்ன பண்ண
எரு தட்டும் சோலியில
ஒடஞ்சு போனாக்க
ஒக்காந்து அழுவாளுக

எப்பாடு பட்டாலும் போகாது
எங்குடும்ப மான மருவாதி
என்னோட கடினத்துல
எம்மக்களுக்கும் சரிபாதி

வேல(லை) செஞ்சு
வெந்தய களி கிண்ட
வீடு வந்து சேந்தாக்க
வெறகு இருக்காது

பருத்தி மாரு கொஞ்சம்
பச்சையா இருக்குதுக
பல் இழுச்சு கெடக்குதுக
பத்த வைக்குமுன்ன
பாதி உசுரு போயிடுமே

கனத்து பேஞ்சாக்க
கம்மா நெறஞ்சுடும்
ஒரச்சு பேஞ்சாக்க
ஓட ஒடஞ்சுடும்
ஒழவு மழ(ழை) பேஞ்சாக்க
கொழுவு
ஓரடிதான் எறங்கிடும்
பொட்டுபோல பேஞ்சாக்க
பொழப்பு தப்புசுடும்

தெய்வான(னை) பொலம்பலத்தான்
தெய்வந்தான் கேட்டிடுமா?
அந்த மழ(ழை) பெய்யட்டும்
எங்குடும்ப வயிறு காயட்டும்

வம்பாடு பட்டு சேத்த எரு
எம்பாடு இப்புடின்னு
நனஞ்சு போயிருச்சு

போன வாரம்
பொத்தி வச்ச எருவத்தான்
சாக்கோட குடுத்து
வித்த பணத்த
கொல்ல கட்ட
கொத்தனாருக்கு குடுத்துப்புட்டேன்

மூக்குத்திய அடகு வச்ச காசும்
முந்தாநாளே முடுஞ்சு போச்சு
மூக்குலதான் குச்சி வச்சு
மூளியாக நிக்கிறனே