இரசனை பசியோடு வந்த விருந்தாளிகளை வருக வருக வருக என்று வரவேற்று என்னுடைய கவிதையை பரிமாறி உங்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது உங்கள் அன்பின் வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்!

தென்றலே















உன்னிடம் உறவாட 
நீ தலைகோதும் சுகம் காண 
இரவில் தொடர்கிறது 
நடைப்பயணம்..

பெண் தொட்டால்தான் 
தேகம் சிலிர்க்குமாமே..? 
நீ தொட்டாலும் சிலிர்க்கிறதே 
ஒருவேளை நீயும் பெண்தானோ..?

இதற்குப் பெயர் 
குளிராமே! சொல்கிறார்கள் 
குருடர்கள்...

ஒரே நேரத்தில் 
உடல் முழுவதும் 
நீ இட்ட முத்தங்கள் 
போதும்..

தென்றலே! 
வருடியது போதும் 
சொக்கிவிட்டேன்..

தென்றலே என்மீது 
வாஞ்சை கொள்ளாதே!
வஞ்சித்து விடுவேன்..

உன்னுடன் 
எப்போதிலிருந்து பூக்கள் 
தோழிகள் ஆனார்கள்..? 
அவர்கள் மணத்தையும்
கூட்டிக்கொண்டு வருகிறாய்..?

பரவாயில்லை!
உனது தோழிகள் 
சொக்கத்தான் வைக்கிறார்கள்...

காயப்போட்ட துணிகளும் 
உன்னோடு 
களவாணித்தனம் செய்கிறது...

ஓடாதே! நில்! 
ஏன் மரங்களிடம் சென்று 
ஊர்வம்பு இழுக்கிறாய்..?
ஓ! உன்னை 
சலவை செய்ய 
சம்பளப் பேச்சோ..?

ஊர் சுற்றும் தென்றலே! 
உயிர் மூச்சு 
உன்னை எண்ணி ஏங்குகிறது.. 
உடலுக்குள் புகுந்து 
உன் வித்தையை காட்டிவிடு...

குளிர்காலத் தென்றலே! 
குளித்துவிட்டு வருகிறேன் 
துடைப்பதற்கு 
துண்டு இல்லை 
உடலை உலர்த்திவிடு

வெயில்காலத் தென்றலே! 
வேலை செய்து 
வெந்து வருகிறேன் 
முந்தானையைக் கொடு 
முகம் துடைப்பதற்கு

என்னிடம் சண்டையிட்டு 
கோபித்து கொண்டு செல்லும் 
உன்னை 
புத்தி சொல்லி 
திருப்பி அனுப்பும் 
மலை வாழ்க...!!