The weekend agriculturist 22-12-2013 ஞாயிற்றுக் கிழமை அன்று ஒழுங்குபடுத்திய நிகழ்விற்கு தோழர்களுக்கு நன்றி.இந்நிகழ்வில் கலந்து கொண்ட கண்ணன்,தமிழ்ச்செல்வன்,ஹரீஸ்,விக்னேஸ்,அருண் குணா,அருண் சுப்பிரமணியன்,ராம் குமார்,தனசேகர்,யுவராஜ்,சுதான்சு அகர்வால்,வெங்கடேஷன்,பாலகிருட்ணன்,சன்னி ஆரோக்கியதாஸ்,அஜய்,நம்மி ஜெசிகா மராக்,ஸ்ரீராம்,ஐஸ்வரியா,சந்திரன்,கண்ணன்,பிரநாவ்,சூரியா நர்மதா,இன்ப விஜயன் ஆகிய கலந்துகொண்ட தோழர்களுக்கு நன்றி.மேலும் இந்நிகழ்வினை ஆவணப்படுத்த உதவிய அருண்குமார் அவர்களுக்கும்,8 வயதே ஆன இளம் புகைப்பட கலைஞன் பிரநாவ் ஆகியோர்களுக்கும் நன்றி சொல்லி இந்நிகழ்வில் எனது அனுபவங்கள் மற்றும் கருத்துக்கள் ஆகியவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
இன்றைய காலகட்டத்தில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பல.அவற்றுள் முக்கியமான ஒன்று வேலையாட்கள் பற்றாக்குறை.இதை ஈடுசெய்யும் முயற்சியாக
என்ஜினியரிங் மற்றும் ஐடி பணியாளர் தங்களுக்கு கிடைக்கும் விடுமுறை நாட்களை குறுநில மற்றும் சிறுவிவசாயிகளுக்காக செலவிடுவதே The weekend agriculturist அமைப்பின் நோக்கமாகும்.அந்த வகையில் திருநின்றவூர் அடுத்துள்ள பாக்கம் எனும் கிராமத்தில் எங்களுடைய நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டது.
காலை 6மணி எல்லோரும் எழுந்து ஊரை விட்டு சிறிது தூரம் நடைபயணம்.செல்லும் வழியில் நான் இயற்கையோடு நடத்திய குடித்தனத்தை மீண்டும் நினைவுபடுத்தும் நிகழ்வாய் வேப்பக்குச்சியில் பல் துலக்கல்.செந்தட்டி எனும் அரிப்பை ஏற்படுத்து செடிய பிடுங்கி எங்கள் மேல் அதை தடவி விளையாடிய கண்ணனின் வழக்கமான குசும்பு.
குளிர்தான்..கடுங்குளிர் தான்.அப்பனியில் குளித்து தலைகூட துவட்டாமல் நெற்பயிர்கள் ஏறுவெயிலுக்காய் ஏங்கிக் கொண்டிருந்தன.புதிய மனிதர்களை பார்த்தவுடன் வித்தியாசமாய் நோட்டம் விட்டுச் சென்றன ஊர் குருவிகள்.
காலை 8மணிக்கு வேலை தொடங்குகிறது.எமது குழுவிற்கு ஒதுக்கப்பட்ட வேலை 2 ஏக்கர் நிலத்தில் கொய்யா கன்றுகளை நட வேண்டும்.உயர்திரு விவசாயி பிரகாசம் ஐயா அவர்கள் கொய்யா கன்றுகளை வாங்கி வைத்து பலநாட்கள் ஆகிவிட்டது.வேலையாட்கள் கிடைக்காதமையால் கன்றுகள் நடுவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.அதனால் சில கன்றுகளும் காய்ந்து விட்டது.அப்பணிக்கு உதவி செய்யவே யாமங்கு சென்றிருந்தோம்.
அதற்கு முன்பு அந்நிலத்தின் தன்மையைப் பற்றி எடுத்துக்கூற வேண்டிய கடமை உள்ளது.முன்னொரு காலத்தில் அந்நிலத்தின் மண்ணானது செங்கல் சூளைக்கு விற்பனை செய்யப்பட்டது.அதன்மூலம் சத்துள்ள மண்களை எடுக்கப்பட்டாகிவிட்டது.பின் அக்கட்டாந்தரையானது சரியான பராமரிப்பின்றி கற்பிழந்தவள் கோலமாய் கலைந்த ஆடையாய் சுற்றுவேலியும்,கற்பை திருடியவன் விட்டுச் சென்ற எச்சங்களாய் முற்செடிகளும் காட்சி அளித்தன.பின் பிரகாசம் ஐயாவால் நிலம் விவசாயத்திற்காய் ஒழுங்கு செய்யப்பட்டு உழுது வைக்கப்பட்டிருந்தது.
முற்களை அப்புறப்படுத்தி இரண்டு உழவு ஓட்டியும் கூட சில இடங்களில் கட்டாந்தரையாகவே இருந்ததை குழி தோண்டும் போது எங்களால் உணரக்கூடியதாய் இருந்தது.மதியம் 2மணியளவில் 2ஏக்கர் நிலத்தில் கன்று நடும் பணி நிறைவடைந்தது.பின் கிணற்றில் நண்பர்களோடு குளியல்.அருமையான அனுபவம் அது.எனது பழைய வரலாற்றை நினைவு படுத்தியது.
இரண்டு வேளை எங்களது தோழர்களுக்கு சலிப்பு பாராது சமைத்து தன் அன்புக்கரங்களால் பரிமாறிய அந்த அன்புச்சகோதரிகளுக்கு நிச்சயமாக எங்களுடைய நன்றியினை இவ்விடத்தில் பதிவு செய்ய வேண்டும்.
”தனக்காக மட்டுமே வாழ்பவன் -சுயநலவாதி
தனக்காகவும் தன்குடும்பத்திற்காகவும் வாழ்பவன் -சாதாரண மனிதன்
தானும் வாழ்ந்து பிறரும் வாழ நினைப்பவன் -மனிதாபிமானி
பிறர் வாழ தன்னையே அர்பணித்தவன் -போராளி”
இதைச் சொல்லும் போது என் நா தளதளத்தது.உள்ளத்திலிருந்து எழுந்த வார்த்தைகள்.இந்நிகழ்வை ஏற்பாடு செய்து கொடுத்து எங்களோடு இணைந்து பணியாற்றிய மதிப்பிற்குரிய சாரதி ஐயாவை பற்றியும் அவரது களப்பணிகள் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும்.
பாக்கம் கிராமத்தில் “உதவும் நண்பர்கள்” எனும் அமைப்பை வைத்து பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்துவருகிறார்.ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதரவு வழங்குதல்,மருத்துவமனை,விவசாயிகளுக்கான தகவல்களை திரட்டி ஆலோசனை வழங்கி அதற்கு உதவி செய்தல்,தையல்,தட்டச்சு பயிற்சி போன்றவற்றை தன்னால் இயன்ற அளவு அக்கிராம மக்களுக்கு செய்துவருகிறார்.பல்வேறு ஆக்கப்பூர்வமான கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொண்டார்.அவரை சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.மேலும் அவருடைய களப்பணிகள் தொடர எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
”மாற்றம் ஒன்றே என்றும் மாறாதது”-காரல் மார்க்ஸ்
இத்தேசத்தில் எண்ணற்ற பிரச்சனைகள் நம் கண்முன்னே இருக்கின்றன.நமக்கான களமும் பரந்துபட்டு விரிந்து கிடக்கின்றன.இச்சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய பாரிய கடமைப்பாடுகளும்,தார்மீக பொறுப்புக்களும் இளையோர்களாகிய நமக்கு இருக்கிறது.
எத்தனையோ வாழ்க்கைப் போராட்டங்களும் குமுகாய போராட்டங்களும் இருப்பினும் விவசாயத்திற்கு இளையோர்கள் தோள் வேண்டியது அவசியமாகிறது.ஒருதலைமுறையே விவசாயத்தை விட்டு வெளியேறி வந்துவிட்டது.விவசாயம் குறைந்து வருகிறது என்றால் நாம் அழிந்து கொண்டு வருகிறோம் என்றே அர்த்தம் கொள்ளப்படல் வேண்டும்.
இதை ஈடுசெய்வது எப்படி? இருக்கின்ற விவசாயிகளை எப்படி விவசாயத்தை தக்கவைத்துக் கொள்வது என்கின்ற கேள்வி சமுதாயத்தைப் பற்றி சிந்திக்கும் இளையோர்களின் உள்ளங்களில் எழுகிறது என்பதே நிதர்சனம்.
”உழவுக்குந் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்-வீணில்
உண்டுகளித் திருப்போரை நிந்தனை செவோம்” -பாரதியார்
எந்த ஒரு வேலையிலும் பிரச்சனைகள் அதிகம் இருப்பின் அதைவிட்டு வெளிவர நினைப்பதே மனித இயல்பு.ஆக,நாம் விவசாயிகளின் பிரச்சனைகள் களைய வழிவகை செய்தாக வேண்டும்.அரசியல் முடிவுகளை தவிர்த்து நாமும் நேரடியாக களத்தினில் இறங்கி வேலை செய்வது அவசியமாகிறது...
எப்படி செய்வது இதனை? விவசாயிகளின் பிரச்சனைகளை அறிந்து அதற்கு தீர்வு காண வேண்டும்.குறைந்தபட்சம் நமக்கு கிடைக்கும் விடுமுறை நாட்களிலாவது விவசாயிகளுக்காக விவசாயத்துக்காக நாம் செலவிட வேண்டும்.விவசாயிகள் முன்வைக்கும் முக்கிய பிரச்சனையான வேலையாட்கள் பிரச்சனை.அதை ஈடுசெய்யும் முயற்சியாகவே யாம் சென்றிருந்தோம்.
மேலும் அத்தோடு மட்டுமில்லாமல் அரசு அளிக்கக் கூடிய மானியங்கள்,கடன் உதவிகள் ஆகிய தகவல்களை அந்தந்த பகுதியில் உள்ள அதிகாரிகளிடம் கேட்டறிந்து அத்தகவல்களை விவசாயிகளிடம் சேர்க்க வேண்டும்.இயற்கை விவசாயத்தையும் ஊக்குவிக்க வேண்டும்.விவசாயிகளின் உழைப்பில் இடைத்தரகர்களே லாபம் பெறுகின்றன.விவசாயிகள் நேரடி விற்பனையில் ஈடுபட ஊக்கப்படுத்த வேண்டும்.இதை அந்தந்த பகுதிகளில் உள்ள இளையோர்கள் ஒரு குழுவாக சேர்ந்து செய்ய முன்வர வேண்டும்
”இளையோர்களே! இளையோர்களே!
கணினியில் வேலை செய்தாலும்
கரங்கள் கடப்பாரை பிடிக்கவேண்டும்
ஏசியில் அமர்ந்து வேலை செய்தாலும்
ஏறுவெயிலில் ஏர்பிடிக்க வேண்டும்
உண்டு மட்டுமே வளர்த்த உம் தோளங்கள்
வீழ்ந்துவரும் விவசாயத்தை தாங்க வேண்டும்
ஏழை விவசாயின் வலிதனை
எல்லோருமிங்கு உணர்தல் வேண்டும்.”