இரசனை பசியோடு வந்த விருந்தாளிகளை வருக வருக வருக என்று வரவேற்று என்னுடைய கவிதையை பரிமாறி உங்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது உங்கள் அன்பின் வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்!

சிரிக்காதீர்! நாம் இந்தியர்!










உழைத் துண்டு வாழ உள்ளே சென்றவன்
உயிரோடு வருவானாவென்று
உள்ளம் குமுறுகிறது
கரையிலிருந்து மீனவக் குடும்பம்

தமிழர் கடல் மீதினில்
செத்து மிதக்கிறது தமிழன் பிணம்
மன்னிக்க! இந்தியன் பிணம்(?)
நட்பு நாட்டவன்தானே யிங்கு
நம்முயிரைக் கொல்கிறான்
ஆதலால் மறப்போமாக! மன்னிப்போமாக!
சிரிக்காதீர்! நாம் இந்தியர்!

தமிழ்த்தாய் தலையிலும்
காலிலுமி ரண்டு
கட்டி வைக்கப்பட்டுள்ளது அணுவுலை
அகற்றி எறி என்போரை
அடேய்! தேசத் துரோகி
என்கிறது இந்தியம்!

காவிரியும் வைகையும்
பாய்வதை தடுத்தி யிங்கு
தேசிய பாதுகாப்பு நதியை
பாயவிடுகிறது இந்தியச் சட்டம்
பாரத் தாயின் வளர்ச்சிக்கு
தமிழ்த்தாயை பலிகொடுப்போமாக
சிரிக்காதீர்! நாம் இந்தியர்

அப்பாவிகள் தூக்கு கைதிகளாய்
ஆசாமிகள் சுதந்திர பறவைகளாய்
பார்ப்பானை பாதுகாத்து
பார்ப்பவனை கொலைகாரனென் றாக்கும்
இந்திய அரசியலமைப்புச் சட்டம்
உயர்ந்ததென்று உவகை கொள்வோமாக!
சிரிக்காதீர்! நாம் இந்தியர்!

தனியின வரலாறா?
குப்பையில் போடு அதனை
இனமென்பதற்கான கோட்பாடே
இடிந்தசுவராய் இருக்கிறதிங்கு

இனமென்பதோ மொழியடிப்படையில் அன்றாம்
மதவடிப்படையில் இனமாம்!தேசியமாம்!
மதச்சார்பற்ற இந்துவ இந்தியதேசம்
அதன் குடிமக்கள்தாம் நாம்
சிரிக்காதீர்! நாம் இந்தியர்

தேசிய இனங்களுக்கான
சுயநிர்ணய உரிமையை
மாநில சுயாட்சி கோட்பாட்டை
தரமறுத்த வடக்கத்திய நீதிமான்களே
தமிழனுக்கு தாத்தாவாம்! மாமாவாம்!

தேசிய இனங்களை அடிமையாக்கி
தேசம் கண்டவன் பயங்கரவாதியன்று
தேசிய இனவிடுதலைக்காய் போராடுபவனை
பயங்கரவாதியென்றும் தீவிரவாதியென்றும்
எத்திக்கிலும் உரைப்போமாக!
சிரிக்காதீர்! நாம் இந்தியர்!

தனியின வரலாறு அறியா
தறிகெட்ட முண்டங்களாய்
தலைவர்களின் தவறுக்கிங்கு
தாய்நாடு இந்தியாவை(?) பழிக்காதீர்
என்று என்றும் பிதற்றுவோமாக
சிரிக்காதீர்! நாம் இந்தியர்!

அர்த்தம் தெரியாத
ஜெய்ஹிந்தும்
பாரத் மாதாகி ஜேவும் தான்
இங்கு இந்திய தேசியப்பற்றை
ஊட்டி வளர்க்கும் வார்த்தைகள்!
அதன் அர்த்தமெதற்கு நமக்கு
ஆதலால் சிரிக்காதீர்! நாம் இந்தியர்!