ஆடை யெல்லாம் கலைத்து
அடேய்! முண்டங்களே-தமிழனை
அம்மணமாய் சிங்களன்
அடிப்பதைக் கண்டும்
எழவில்லையோ கோபம்
எங்கே போனது இன உணர்வு?
எங்கே போனது ஒற்றுமை யுணர்வு?
பாலகனை கொன்றும்
பச்சிளம் சிசுவையும் கொன்றும்
பாடையிலேற்றினானே இனத்தை
பாதகா! பார்த்தும்
அசையலயே உங்கள் மனசு?
ஊனாங்கொடியெனும்
உணர்வாளர்களை
அத்து அத்து யிங்கு
துண்டு துண்டாயாக்குவது தானே
உங்களது பொழப்பு?
ஊனாங்கொடியை
துண்டு துண்டாக்கி
விடுதலையென்னும்
விறகைக் கட்டி
சுமப்பவர்களா நீங்கள்?
எல்லோருக்கும் யிங்கு
ஒரே தேசிய தலைவன் தானாம்
ஒரே இலட்சியம் தானாம்
ஒன்றிணையச் சொன்னோமெனில்
ஓடுகாலிகள் ஓடுகின்றன
ஆளுக்கொரு திசைநோக்கி
முடியும் தான் உங்களால்
ஒன்றல்ல இரண்டல்ல
எத்தனை எத்தனையோ
நினைவு முற்றத்தை எழுப்ப...
ஆனால் முடியாது உங்களால்
ஒரு வெற்றிச்சின்னத்தை எழுப்ப..
மேடை மீதேறி
வாய்ச்சொல் வீரராய்
உணர்ச்சிப் பொருக்கோடு
கத்தி கையாட்டி
கதைப்பீர்கள் அன்றி
வேறேன்ன செய்ய இயலும்?
உங்கள் ரசிகர்களால்
உள் நாக்குத்தான் மடித்து
அடிக்கும் விசிலுக்கும்
எழுப்பும் கரகோசத்துக்கும் தானா
உங்களது பேச்சு?
உங்களது கத்தல் பாணி?
அப்படி என்னதான் கேட்டோம்
ஒன்றிணையத் தானே கேட்டோம்
அதும் மக்களுக்காய்
போராடுகிறீர்கள் என்றுதானே
உங்களை கேட்டோம்
ஒன்றிணையச் சொன்னோமெனில்
அதற்கு நீங்கள் யிங்கு
கொடுக்கின்ற
வேகாத விளக்கமோ
காரித்துப்ப வைக்கிறது
அதிலும் இன்னார் யிங்கு
தமிழரென்று அறிய
மரபணு சோதனையிடும்
மருத்துவர்கள் பலர் உலாவுகின்றன
திராவிடமென்னும்
பயிர்வளர்க்கும் வேலையிலும்
தமிழ் தேசியமென்னும்
பயிர்வளர்க்கும் வேலையிலும்
உலகத்தமிழரின் இலட்சியத்தை
அடமானம் வையுங்கள்-அல்லது
அதை வைத்தி யிங்கு
வியபாரம் செய்யுங்கள்
நாதியத்த இனமடா நாம்
இழவெடுத்த இனமடா நாம்
இன்னும் இணையாதிருப்பதன்
காரணம்தான் ஏதுடா?
இனத்திற்காய்
போராடுகிறோமென்று சொல்வோர்
இணையாதிருந்தால்-நீங்கள்
இனவிடுதலையின்
முட்டுக்கட்டைகளென்றி
வேறென்ன சொல்வது?