திண்டிவனத்தில் இருந்து அவ்வழகிய ரெட்டணை கிராமம் 17கி.மீ தொலைவில் அமைத்துள்ளது.பெரும்பாலும் கிணற்று பாசனத்தை நம்பிய கிராமம்.மழைகாலத்தில் நெற்பயிறும் மற்ற காலங்களில் தண்ணீருக்கு ஏற்றபடி விவசாயமும் செய்யப்படுகிறது.அங்கு கிருபா சங்கர் தோட்டத்தில் வேலை செய்யக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.இதில் தங்களது பங்களிப்பினை தந்த தமிழ்செல்வன்,கண்ணன்,ஹரிஸ்,ஹரி,அனிருத்,ரவிச்சந்திரன்,கிருபா,சேகர்,சாந்தா அம்மா ஆகியோர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.பழமையை அணுஅணுவாய் விரும்பி ரசித்து கட்டிய வீட்டில் தங்கக்கூடிய வாய்ப்பு கிட்டியது.அந்தவகையில் கிருபா அவர்களுக்கும்,அவருடைய தந்தையாருக்கும் எமது நன்றிகள்.மேலும் இந்த நிகழ்வை ஒழுங்கு செய்த The Weekend Agriculturist குழுவிற்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
ரெட்டணை கிராமத்தில் சில விவசாயிகளுடன் பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.அதில் சில விடையங்கள் எமக்கு தெளிவு பெற்றன.பல விவசாயிகள் வேலையாட்கள் கிடைக்காமல் அலைகின்றன.இதனால் அவர்கள் விவசாயம் செய்ய முடியாமல் விளைநிலங்களை விற்கின்றன்.இல்லையெனில் வேலையாட்கள் அதிகம் தேவையில்லாத விவசாயத்தை நோக்கி நகர்கின்றன.குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் மாமரம்,தென்னை,தேக்கு,சவுக்கு போன்ற மரங்களை நடுகின்றன.மாமரம் வளர்ந்துவிட்டால் அது வருடத்திற்கு ஒருமுறை வருமானத்தை மட்டும் கொடுத்துக் கொண்டிருக்கும்.தென்னை ஒவ்வொரு வெட்டுக்கும்(மூன்று மாதம்) வருமானத்தைக் கொடுக்கும்.சவுக்கு மூன்று வருடத்திற்கு ஒருமுறை வருமானத்தைக் கொடுக்கக்கூடியது.
அதிலும் முதலீட்டுக்கு பணம் இல்லாத விவசாயிகள் தங்கள் விளைநிலங்களை தரிசு நிலங்களாக போட்டு விடுகின்றன.சிலர் நிலத்தை வீட்டுமனைக்கும் விற்று விடுகின்றன.விவசாயத்தை மட்டுமே வாழ்வோர் வட்டிக்கு கடன் வாங்கி கன்றுகளை நடுகின்றன.அரசானது மரக்கன்றுகள்,விதைப்பயிர்கள்,உரம் ஆகியவற்றை மானியம் வழங்கும் விடையமே அவர்களுக்குத் தெரிவதில்லை.நாம் அவர்களிக்கு அந்த மாதிரியான மானியங்கள் இருப்பதை அவர்களிடம் பெரும்பாலும் கொண்டுசெல்லவில்லை.இவ்விடையத்தில் படித்த இளைஞர்களின் பரப்புரை முக்கியத்துவம் வாய்ந்த அவசியமாகிறது.
ஒவ்வொரு பகுதியிலும் உள்ள ஊராட்சிமன்ற மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்குச் சென்று அரசின் மானியங்கள் பற்றிய தகவல்களை திரட்டி அப்பகுதி விவசாயிகளிடம் கொண்டு செல்ல வேண்டும்.மேலும் அம்மானியத்தை விவசாயிகள் பெற்றுக் கொள்ள கடைசிவரை அவர்களுக்கு உதவ வேண்டும்.அரசு ஒதுக்கும் மானியம் சரியாக விவசாயிக்கு சென்றடையவில்லை எனில் அது பெரும்பாலும் உண்டுகொளுத்த பணமுதலைகளுக்கே சென்றடைகின்றன.அரசானது நமது மக்களுக்கு தேவையானவற்றை நமது நாட்டிலேயே உற்பத்தி செய்ய வாய்ப்பிருந்தும் அதை ஊக்குவிக்காது இறக்குமதியில் கவனம் செலுத்தி பொருளாதார கொள்கைகளை வகுப்பது அபத்தமானது.வருத்தத்திற்குரிய விடையமும் கூட.
நாள் முழுவது தங்களது வியர்வையை சிந்தி சம்பாதித்த பணத்தை மாலை ஆனதும் மதுக்கடையில் அவர்கள் கொடுக்கக்கூடியதை காணக்கூடியதாய் இருந்தது.மது என்பது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று.
இன்றைய காலகட்டத்தில் நாமெல்லாம் நகரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.ஆனால் நகரத்தில் இருந்து நாம் கிராமத்தை நோக்கி சென்று சரிந்துவரும் விவசாயத்தை தாங்கிப் பிடிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.குறிப்பாக படித்த இளையோர்கள் விவசாயத்தில் கண்டிப்பாக தங்களது பங்களிப்பினை செய்ய வேண்டும்.முற்று முழுதாக இல்லாவிடினும் விடுமுறை நாட்களிலாவது தங்களது உழைப்பினை விவசாயத்திற்கு தரவேண்டும்.
விவசாயத்தையும் விவசாயின் உயிரையும் காப்பாற்றுங்கள் இளையோர்களே!
அங்கிருந்து கடைசியில் விடைபெறும் போது “நீங்கள் இருந்தமையால் இரண்டு நாட்கள் கலகலப்பாக இருந்தது” என்று புன்முறுவல் செய்தார் சாந்தா அம்மா..மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையில் விடைபெற்றேன்.