ஆடவனின் அழுகுரல் கேட்டேன்
ஏனென்று கேட்டேன்
அவளின்று பேசவில்லையென்றான்
கண்டேன்! சிரித்தேன்!
காதலிக்க வெறுத்தேன்.
திரையரங்கு சென்றேன்
திரையில் விம்மியழும் சோகக்காட்சி
அருகில் காதலர்களின் முத்தக்காட்சி
கண்டேன்! கண்டேன்!
காதலிக்க வெறுத்தேன்.
இரவெல்லாம் கண்விழித்து
உப்புச்சப்பில்லா பேச்சையும்
சுவையோடு பேசுவோரை
கண்டேன்! கண்டேன்!
காதலிக்க வெறுத்தேன்.
யதார்த்தங்கள் பலமறந்து
இருவர் மட்டுமே இருப்பதாய்
இங்கு கற்பனையுலகில் மிதப்போரை
கண்டேன்! சிரித்தேன்!
காதலிக்க வெறுத்தேன்.
வாழ வழி பலவிருக்க
காதல் தோல்வியென்று
சாக்கோலம் பூண்டு மடிந்தோரை
கண்டேன்! அழுதேன்!
காதலிக்க வெறுத்தேன்.
தமிழ்வீரம் காட்டிய
கடலழகைக் காண கடற்கரை சென்றேன்
காதலரென்று காமம் தீர்ப்போரை
கண்டேன்! நொந்தேன்!
காதலிக்க வெறுத்தேன்.
பட்டப்பகல் நேரத்தில்
பலர் நடமாட்டம் மத்தியில்
பகல்கூத்து செய்வோரை
கண்டேன்! கண்டேன்!
காதலிக்க வெறுத்தேன்.
சுட்டெரிக்கும் வெயிலில்
சுடுமணல் மேலமர்ந்து -இதழ்
சுவைக்க ஏங்குவோரை
கண்டேன்! வெந்தேன்!
காதலிக்க வெறுத்தேன்.
நாய் போல் நாடறிய செய்வது
நாகரீக மாற்றமோ?-இங்கு
பண்பாடு சீரழிய
கண்டேன்! துடித்தேன்!
காதலிக்க வெறுத்தேன்.
காதலும் வீரமும் தமிழர் மரபு என்பர்
காமமில்லா காதலேது என்பர்
நானிங்கு காண்பதுவோ காதல்?
கருமம்! கருமம்!
காதலிக்க வெறுத்தேன்