இரசனை பசியோடு வந்த விருந்தாளிகளை வருக வருக வருக என்று வரவேற்று என்னுடைய கவிதையை பரிமாறி உங்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது உங்கள் அன்பின் வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்!

கிராமத்து வாழ்க்கை


















ஊர்த் திருவிழாவின் போது தற்காலிகக் கடை வீதியில் 
வாலிபர்களின் உள்ளத்தைக் கிறங்கடிக்கும் 
வண்ண வண்ணப் பாவாடை தாவணிகள்

”மாமன் வளையல் வாங்கித் தரவா...?” என்று கேட்பதும்,
அதற்கு அவள் பதில் ஏதும் பேசாமல் 
தலை குனிந்து ஓரக்கண்ணால் பார்த்து 
வெட்கத்தோடு ஒரு நமட்டு சிரிப்பு சிரிப்பதும்,

இராட்டணம் சுற்றத் துடிக்கும் 
புதுமண சோடிகளும், புதுக் காதலர்களும், 
ஆகா!!! கிழவிகளும் குமரியைப்போல் 
மினுக்கிக் கொள்ளும் இந்த திருவிழா 
வருடத்தின் அனைத்து நாட்களும் வராதோ..? 

காற்றின் மீது பழியை போட்டுவிட்டு 
பக்கத்தில் உள்ள மரத்திடம் 
உரசி ஊடல் புரியும் தென்னைமரங்கள்

என்னை விட அழகில் மிஞ்சியவள்
இந்த பூவுலகில் யாரும் இல்லை என்ற கர்வத்தோடு, 
பச்சைப் பாவாடை தாவணி அணிந்து, 
பார்ப்போரைக் கதிகலங்க செய்யும் நோக்கத்துடன் 
சற்று வெட்கத்துடன் தலை குனிந்து 
நிற்கும் நெற்பயிர்கள்.

ஊருக்கே நிழல் தர முயற்சிக்கும் 
பறந்து விரிந்த அரசமரம்.
கடைசி வரையில் கன்னிகழியாத 
முதிர்கன்னிகளை போல் 
ஊர் முச்சந்தியில் இருக்கும் 
இரண்டு காய்க்காத மா மரங்கள்.

தண்ணீர் எனும் போர்வையை 
இளங்குமரி போல் போற்றிப் படுத்திருக்கும் 
குமரிகுண்டுக் குளம்
அது எப்படியோ தெரியவில்லை
குமரிகுண்டுக் குளத்தில் தண்ணீர் வற்றுவதேயில்லை
ஒருவேளை அக்குமரிக்கு வருடமெல்லாம் 
பூப்புனித நீராட்டுவிழா நடக்குமோ?

இக்குமரிகுண்டுக் குளத்தில் உள்ளூர் உறவு தோழமைகளுடன் 
நீச்சல் அடித்தும், மீன் பிடித்தும் மகிழ்ந்த நாட்கள் 
என் கண்ணில் மிதக்கின்றன.... 
கனவுகளாக அல்ல, கண்ணீராக....... 

இத்தருணத்தில் பணியிடச் சூழல் காரணமாக 
இவ்வழகிய கிராமத்தை பிரிந்து வாடுகிறேன்.. 
இது காலம் எனக்கு இழைத்த துரோகமா..? அல்லது 
 நான் என் கிராமத்திற்கு இழைத்த துரோகமா..?  தெரியவில்லை. 

ஆனால் ஒன்று மட்டும் உண்மை. 
எவ்வளவுதான் பிரிந்து வந்தாலும் 
இன்னும் என் கிராமத்தின் மீதுள்ள 
மோகத்தின் வீரியம் குறையாமல் 
பாதுகாத்துக் கொண்டிருக்கிறேன்...!!!