பத்திரிகை அடித்துப் பந்தலிட்டுப் பந்திபோட்டுப் பரிமாறி
மேளதாள நாதஸ்வர முழக்கத்துடன்,
பெரியோர்கள் மற்றும் உறவினர்கள்
முன்னிலையில் நடைபெறும் அருமையான
நிகழ்ச்சி திருமணமாம்!
இத்திருமணக் காற்று என் வாழ்க்கையில்
என்று வீசுமோ?
வாய்க்கால் நீர் வயலை அடையும் முன்
வாய்க்கால் வரத்து நின்றுவிடுமோ?
நெற்பயிரானது நன்கு தளதளவென வளர்ந்து ,
தன் வயிற்றிலிருந்து கதிர்களை வெளியே தள்ளாமல்
காய்ந்து போனால் துக்கமோ விவசாயிக்கு!
பெண்ணாகப் பிறந்து தாய்மை அடைய
பாக்கியம் இல்லாமல் போனால் துக்கம் யாருக்கு?
புதுமனை கட்டியும் குடிபுக ஆளில்லையே!
என் கனவுகள் கலைந்ததை
இந்தக் காடைகளும் ஏளனம் பேசுகிறதே!
திண்ணையில் உட்கார்ந்து பூக்கட்டிக் கொண்டே
எத்தனை நாட்கள் தாய் வீட்டில் காலம் கழிப்பதோ?
ஆகா!இந்த பூக்களும் பெண்களைப் போலத்தானோ?
பூமாலை தொடுக்கும் போது,
பூக்களின் காம்புகளை இணைத்து,
நாரினால் போடப்படும் முடிச்சினைத் தாங்கிக் கொண்டால்
அதுவோ சுமங்கலிப் பூக்கள்!
நாரின் அழுத்தம் தாங்காமல் அறுந்து விழுந்தால்
அதுவோ விதவைப் பூக்கள்!
ஆனால் செடியிலேயே வாடிவதங்கி,
காய்ந்து கருகி கீழே விழுந்தால்,
அதுவோ முதிர்கன்னிப் பூக்கள்!
என் இளமையைக் கரைத்த சாதகத்தை
கண்டுபிடித்தது எவனோ?
சாதக தோஷத்தைத் சொல்லியே
என் வாழ்க்கையைச் சோகத்துக்கு
உள்ளாக்கிய சோதிட கயவர்களே!
முதிர்கன்னிகளை உருவாக்குவதில்
உங்களுக்கும் ஒரு பங்கு உண்டு என்பதை
மறந்துவிட வேண்டாம்.....!!!
