அழகான பூஞ்சோலை
அதை
ஆக்கிரமிக்கும் மலர்மணம்
அதன்மேல்
வண்டுகளின் படையெடுப்பு
பூ உடலுக்குட் தேனாய்
ஒளிந்து கொள்ள வேண்டும்
எவனோ ஒருவன் விதைத்த
விதையில் முளைத்த கதிர்கள்
அதை திருடிச் சென்று
சேமிக்கும் எலிகள்
அது இல்லாத சமயத்தில்
அதன் வலைக்குட் புகுந்து
மண் மணத்துடன்
அதன் இளஞ்சூடு காண வேண்டும்
ஆணவத்தில் ஆடும் அலைகள்
அதனால் தூக்கி எறியப்பட்ட
நத்தை வீடுகள்
அதனுட் புகுந்து
வாடகை கொடுக்காமல்
குடியிருக்க வேண்டும்
இளங்குமரியைப் போன்ற
இளநீர்
அந்த கட்டழகியின்
கற்பைக் கவசம் போல்
பாதுகாக்கும்
மட்டைகளை வென்று
அதன் கண்களின் வழியே
கடலுக்குள் சென்று
நீச்சலடிக்க வேண்டும்
அசுத்தமென்று சொல்லும் உலகில்
அன்பின் சின்னம் எச்சில்
அறியாத வயதுச் சிறுவனாய்
அதக்கியத்தை அபகரித்து
பிடுங்கி தின்ன வேண்டும்
கட்டிக்காத்த மானம்
இம்மி அளவு குறைந்தாலும்
இன்னுயிரை மாய்த்துக் கொள்ள
வேண்டும்
எனக்காக யார் யார்
அழுவார்கள்?
யார் யார் போலி மெளன
அஞ்சலி செலுத்துவார்கள்?
என்று காண
ஒருமுறை இறந்து மீண்டும்
உயிர்த்தெழ வேண்டும்
அறியாத முகங்களை
அன்பால் அரவணைத்து-என்
ஆயுள் முடியும் நாளில்
அவர்களை எல்லாம்
அழ வைக்க வேண்டும்
எகத்தாளம் பேசும் சிலர்
ஏறிமிதிக்கும் சிலர்-அவர்கள்
எண்ணத்தை
என் எழுதுகோல் பேசும்
எழுத்துக்களால்
கொள்ளை கொள்ள வேண்டும்
துவண்டு விழும் நேரத்தில்
ஆறுதல் கூற அன்னையும்
தோள் சாயத் தோழியும்
கட்டித்தழுவக் காதலிகளும்
காத்துக் கிடக்க வேண்டும்
