பிரிவு
ஆறு மாதகாலம்
ஆறு யுகம் பிரிந்த
வேதனைச் சகதி
மனதில் அப்பி கொண்டது
குத்த வைத்த
குமரிக்குண்டு குளமே!
என்னை பிரிந்து அழுதாயாமே?
இதோ குடிசை கட்ட வருகிறேன்
என் தோட்ட தென்னை மரங்களே!
காதோர முடிகளை கோத
கட்டிபிடிக்க
கண்ணீர் மல்க
காதலன் வருகிறேன்
உடலை அழுக்காக்கி
உள்ளத்தை அழகாக்கி
மனமெல்லாம் மணந்த
மண்ணே!
உன்னில் உருண்டு புரள
உனைத் தேடி வருகிறேன்
உடம்பு வலி என
பொய் சொல்லி
பாசாங்கு செய்து-என்
பாதச் சுகம் காண
படுத்திருக்கும்
ஏரிக்கரையே!
ஏங்காதே
ஏமாற்றிவிடமாட்டேன்
வந்து விடுகிறேன்
குளித்தவுடன்
தலைமுடியில் இருக்கும்
ஈரத்தை
ஈவு இரக்கம் இல்லாமல்
திருடிக்கொண்டு சென்றவளே!
என்னைக் காணாமல்
எட்டுத் திசையும்
பித்துப் பிடித்து அலைந்தாயாமே?
தெக்கத்தித் தென்றலே
தேம்பாதே-உனைத்
தேடி வருகிறேன்
தனிமைக்குத் தாயாகி
தலை வைக்க மடி
தந்தவளே!
வெயிலில் குடைபிடித்த
வேப்பம் மரமே!
வேதனைப்படாதே
வேகமாக வந்து விடுகிறேன்
பதினாறு வயது வரை
பக்குவப்படுத்திய
பள்ளிக்கூடமே!
மீண்டும் ஒருமுறை-உன்
மடியில் அமர்ந்து பார்க்க
இதோ வருகிறேன்
பகுமானம் பேசிய
இலுப்ப மரத்துப் பச்சைக்கிளிகளே!
உங்களை
வம்பிழுத்து
வாய் சண்டையிட வருகிறேன்
வயலில் பூத்த நெல்மணிகளே
உங்களைக் கதிரடித்து
களத்துமேட்டில்
கால் கலப்பையால்
வகுடெடுக்க வருகிறேன்
மகரந்த சேர்க்கையையே
மறந்துவிட்ட
மாமரங்களே
பருவ காலத்தில் மட்டும்தான்
பருவமடைவீர்களா?
எனக்காக ஒருமுறை
பங்குனிக்கு முன்பே
பழுத்து தொங்குங்கள்
பாட்டன் மாண்ட
பாண்டிய மண்ணே!
இறுகிவிட்ட இரத்தம்
இதயக் கலனில் கொதிக்கிறது
இறுதியில் ஆவி குளிர்ந்து
இரு சொட்டு கண்ணீர் துளிகள்
கண்களில்….
கண்கள் பேசும் மொழிகள்
கண்ணீர்..
அது சொல்லும்
நம் பாசத்தை
இதோ வருகிறேன்