இரசனை பசியோடு வந்த விருந்தாளிகளை வருக வருக வருக என்று வரவேற்று என்னுடைய கவிதையை பரிமாறி உங்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது உங்கள் அன்பின் வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்!

எனது தோட்டம்

















கள்ள உரசலா? கத்திச் சண்டையா?
என தெரியாமல் உரசிக் கொள்ளும்
கரும்புகள்!

அடியேய்! உன் கள்ளக்காதலன் எவனடி?
உன் தேகமெல்லாம் முத்தமிட்ட
செவ்விதழ் சாயம் இருக்கிறதே?
இல்லை! இல்லை!
அவையெல்லாம் தக்காளிக் கனிகள்!

காற்றுடன் போட்டிபோட்டு
உன் கொலுசுகள் சதிபாடுகிறதே?
இல்லை! இல்லை!
அவையெல்லாம் தென்னம்மட்டைகள்!

ஐயோ! இது என்ன?
பாதத்தில் வரும் பித்தவெடிப்பு
வெயில் காலத்தில்-உன்
தேகமெல்லாம் வெடிக்கிறதே!

உன்னைத் தொட்ட தென்றலும்
தெம்மாங்கு பாடுகிறதே!
குமரிக்குண்டு குளத்தண்ணீர் கடைசியாக
குளிப்பாட்டும் குமரியடி நீ!

ஊருக்கு வந்தவுடனே முதலில் பார்க்க
ஆசைப்படுவது உன்னைத்தானே!

உயிர் உள்ளபோது எங்கள் வம்சமே
உன் விளைச்சலைத் தின்றோம்.
உயிர் இழந்தபோது எங்கள்
உடலை நீ தின்றாய்!

“கிணறு தோண்டுகிறோம்” என்று
உன் நெஞ்சை குத்தினார்களே!
எனக்குத் தெரியும் வெளிவந்தது தண்ணீர் அல்ல!
உனது இரத்தம்!

எனக்கு கண்ணாய் இருந்த நீ
என் கண்முன்னே கைமாறக் கண்டேனே!

கனவுகளோ கண்ணீர் வழியே!
உன் விலாசமோ விதி வழியே!

உடல் உறங்க மறுக்கிறது!
மனம் உன்னை நினைக்கிறது….!!