மனிதர்கள் உறங்கும் நேரம்
நான் மட்டும்
கட்டிடத்தின் மேல்
காத்துக்கிடக்கின்றேன்.,
முதலிரவுக்கு காத்திருக்கும்
ஆண் போல,,,
மதி மயக்கம் தான்
மரமே!
உன்னைப் பார்த்தவுடன்…
சோகம் சூழ்ந்தாலும்
உன்னைப் பார்த்தால்
சொக்கித்தான் போகிறேன்
உன்னிடம் நான் மட்டுமே
பேசுகிறேன்…
ஏனடி இந்த மௌனம்..?
வெக்கம் வேண்டாமடி!!
தலையசைக்கிறாய்,
காற்றின் உதவியோடு…
உயரத்தில் நின்று
நம் காதலைக் கூறுகிறேன்…
பயப்படாதே!
விழுந்துவிடமாட்டேன்…
ஏனடி இந்த
தலைவிரிக் கோலம்..??
உனக்கு மட்டும் தானடி
முடி கொட்ட கொட்ட
முளைக்கிறது,
மட்டைகளாக…!!
அடியேய் கள்ளி!
உன்னிடம் கள்ளுக் கிடைக்குமாமே..?
காணிக்கை வாங்காமல்
காவற்துறை உன்னை மட்டும்
விட்டு வைத்த மர்மம் என்ன..?
இது என்ன?
உன் தலையில் பேன்
எடுக்கிறார்கள்?
ஓ! இதுதான்
மரம் கழிப்பதோ…!
குலைகுலையாய் -உன்
கருமுட்டைகளை
காண்கிறேன்…
உன் கருவை வெட்டி
குடிக்கிறார்களே
கயவர்கள்,
இளநீர் என….!
ஒரு குழந்தை பெற
எத்தனை பாடு..?
மனிதர்கள்
மாண்டபிறகும்
தன் உறுப்புக்களைக்
கொடுக்க மனமில்லை…
ஆனால்! நீயோ
பிறக்கும் போதே
உன்
உறுப்புகள் அனைத்தையும்
எழுதி வைக்கிறாய்,
மனிதர்கள் பயன்பாட்டிற்கு…
மனிதஉயிர் பிரசவநேரம்
சில நிமிடங்கள்….
உன் பிரசவநேரம்
பல நாட்கள்….
தன்னுள் கருமுட்டையை
வளர்த்துப் பின்,
குழந்தையை பெற்றெடுக்கிறது
மனித இனம்….
நீயோ!
குழந்தையைப் பெற்று
வெளியே கரு வளர்க்கிறாய்…
சுழல்காற்று
உன் கழுத்தை நெரிக்கிறது..
தலையைத் திருகுகிறது…
துவைக்கப்படும்
துணி போல…
என்ன செய்வது?
விதி!
உன் தலையிலும்
இடி விழுகிறது…!!!
