சமாதிக்குத் தலைசீவி
சுண்ணாம்பு பவுடர் பூசி
வாழையிலைப் பட்டுடுத்தி
கரும்புச்சோகை ஆபரணமிட்டு
தொலைந்து போன என் வரலாற்றை
தோண்டப் போகிறேன்
மிஞ்சாத மஞ்சள்களும்
கெஞ்சாமல் கொஞ்சி
மிஞ்சாமல் கட்டிக்கொள்ளுமே
பொங்கல் பானையின் கழுத்தை
ஐப்பசியில் நட்ட நாத்து
கார்த்திகையில் வெக்கப்பட்டு
தை மாதம் களத்துமேட்டில்
நோகாமல் நொக்கு பெத்து
இராசி கொளுத்துடுமே
உழவர் திருநாளில்
மல்லிகைப்பூ வாங்கித் தர
மாமன் பொண்ணு மடங்கி வர
அச்சாரத்தை போடத்தான்
அடித்தளம் அமைத்திடுமே
பொங்கல் திருநாள்
வெட்டப்பட்ட கதிர்களும்
வெக்கப்பட்ட தாவணிகளும்
குத்துப்பட்ட காளைகளும்
குமரிப்பெண் நாணமும்
வாழைமரத் தண்டுகளும்
வரவேற்கும் பெண்டுகளும்
மயக்கும் மல்லிச் செண்டுகளும்
பருவமடைந்த கதிர்களும் -அதன்
கற்பைக் களமாடும் களங்களும்
சிதறித் தெறித்த நெற்களும்
குவித்து அளக்கும் மரக்கால்களும்
காணக் கிடைத்திடுமே
பொங்கல் திருநாளில்
தேங்காய் பல்லிளிக்க
வாழைப்பழம் கண்திறக்க
கரும்பை வாய் கடிக்க
கட்டழகை கை பிடிக்க
குமரியத்தான் கண்ணடிக்க
பொங்குது பார் பொங்கலிது
பொங்கலோ பொங்கல்
