நீண்ட கம்பு வைத்து
பாதி ஆடை கட்டிக் கொண்டு
ஆடுகளை அதட்டிக் கொண்டு
சுற்றி திரிந்த இடங்களை
மறக்க முடியுமோ?
மம்புட்டியை தூக்கமுடியாத வயதிலும்
மாமனுடன் மல்லுக் கட்டி
வயதுக்கு மிஞ்சிய வலுவுடன்
வாரி வரித்துக் கட்டிக் கொண்டு
வரப்பு வெட்டிய நினைவுகளை
மறக்க முடியுமோ?
குமரிப்பெண் இதழ்களென
கும்மென்று தக்காளி பழுத்திருக்க
எடுத்து ஒன்று சேர்த்து
அடுக்கி கூடை போட்டு
மாடுபூட்டி வண்டி கட்டி
விற்று திரும்பும் போது
வடை வாங்கி கொண்டு
வரும் வழியில் உண்டு மகிழ்ந்த
நினைவுகளை மறக்க முடியுமோ?
பருவமடைந்த நெற்கதிர்களை
பகல் முழுவதும் கதிரடித்து
இரவுக் காவலுக்கு களத்துமேடு சென்று
உடல் நடுங்கும் குளிரினிலே
தாத்தன் நெஞ்சுக்குள் முகம்பதித்து
கட்டிப்பிடித்து படுத்துறங்கிய
நினைவுகளை மறக்க முடியுமோ?
காலை பொழுது விடிவதற்குள்
கண்விழித்து காடு சென்று
திமிறி நெஞ்சுயர்த்தி வளர்ந்த
அந்த கீரைகளை வெட்டிக்கட்டி
தலைச்சுமையாய் கூவி ராகமிட்டு
விற்ற நினைவுகளை மறக்க முடியுமோ?
குளங்களில் சிறந்ததெனவே
குமரிக்குண்டு குளம் விளங்கிடவே
குளிக்க ஆள் சேர்த்து
சுரக்குடுக்கையிடம் உயிரை ஒப்படைத்து
நீச்சல் பழகிய நினைவுகளை
மறக்க முடியுமோ?
அரளிக் குச்சியில் கிட்டி செய்து
அதற்கு கத்தாழம் பழத்தின் வண்ணமடித்து
பொழுது சாயும் வரை விளையாடி
வீட்டில் வந்து நொக்கு பெத்த
கிட்டி விளையாட்டை
மறக்க முடியுமோ?
பள்ளிப் பருவத்திலே
பட்டை கோடு போட்டு
பாவாடை தூக்கிக் கட்டி
பாதிப் பெண்களுடன்
பாடி விளையாடிய
நொண்டி விளையாட்டை
மறக்க முடியுமோ?
நெல் மூட்டைகளுக்கு மறைவிலே
எலி பிடிக்க கூடு வைத்து
சிக்கிய எலி செத்தவுடன்
ஆறேழு பெண்களை அழைத்து வந்து
கூடி வட்டமிட்டு ஒப்பாரி வைக்க செய்து
பாடைகட்டி தூக்கிச் சென்று
எலிக்கு இறுதிச்சடங்கு நடத்திய
நினைவுகளை மறக்க முடியுமோ?
கேலி உறவுமுறை தேடி
கிண்டல்கள் பல செய்து
தூக்கி கொஞ்சும் குழந்தையாயினும்
முறைப்பெண் தானாய் இருப்பின்
"மாமனை கட்டிக்கிறியா?" என்று கேட்ட
நினைவுகளை மறக்க முடியுமோ?
கூடி வட்டமிட்டு திட்டம்போட்டு
வேகமாக வீடு சென்று
ஆளுக்கொரு பொருளை திருடி வந்து
கல் கூட்டி அடுப்பு செய்து
பற்ற வைத்து சமைத்து விட்டு
பரிமாறி சேர்ந்து உண்ட
கூட்டாஞ்சோற்றின் நினைவுகளை
மறக்க முடியுமோ?
இந்த நினைவுகளெல்லாம் மறந்துவிடுமோ?
மறக்கத்தான் முடியுமோ?
இல்லை இல்லை
மாண்ட பிறகும்
மண்ணை தோண்டிக் கேட்டாலும்
மக்காத எலும்புகள் சொல்லும்
அந்த நினைவுகளை
