விளைந்து செழித்த
விவசாய நிலமெல்லாம்
விலைமாதர் போல் ஆனதிங்கு
உலகப்போரின் எச்சமெல்லாம்
மிச்சமில்லாமல் இங்கு வந்தமர்ந்து
அசிங்கம் செய்து நாரடித்து
நாசமாக்கின எங்கள் மண்ணை
குட்டிச்சாத்தானா யிங்கு
இராசயனப் பேய் வந்தமர்ந்தது
அதற்கு எம்மண்ணை பலிகொடுத்து
அரசங்காமே பூசாரித்தனம் செய்தது
முறையாய் பிறப்பதை தடுத்து
குறைப் பிரசவமாய்
குழந்தை பெற
தாயின் கருப்பையை சிதைத்திங்கு
குழந்தை பெறத் துடிக்கும் வெறித்தனம்
விரைவில் குழந்தை பெற
விந்து விதைகளாம்
அதன் அறுவை சிகிச்சைக்கு
அடச்சீ! இராசயன உரங்களாம்
தூ..காலம் மிச்சமாம்
குறைவான உழைச்சலாம்
அதிகமான விளைச்சலாம்
இயற்கை இயற்கை
என்று முழங்கியவன்
திருவாய் இயற்கையாலே
அடக்கப்பட்டுவிட்டது
ஊர் ஊராய்
காடுவயல் வரப்பெல்லாம்
நடந்த உன் கால்கள்
ஓய்வு பெற்றுவிட்டன
மண்ணை படித்தவன் நீ
மண்ணோடு உறவாடியவன் நீ
மண்ணுக்குள்ளே சென்று நீ
மக்கிவிடத் துடித்தாயோ
முன்னோக்கிச் சென்றோரெல்லாம்
பின்னோக்கி வந்தால்தான்
முன்னேறிச் செல்ல முடியுமென
வந்தார்கள் வந்தார்கள்
இளையோர்கள் உன்பின்னால்
மரமென்ன மலையென்ன
செடியென்ன கொடியென்ன
காடென்ன வயலென்ன
இவை யெல்லாம் இருந்தென்ன?
இவற்றை காக்கத் துடித்தவன்
இல்லையே இப்போது நம்மிடம்
இயற்கையின் பிள்ளை
இல்லைதான் நம்மிடம்
இனி என்றுமே
இருப்பான் நம்மிடம்
நம்மாழ்வார்-இனி
நம்மை ஆள்வார்
------------------------------