இரசனை பசியோடு வந்த விருந்தாளிகளை வருக வருக வருக என்று வரவேற்று என்னுடைய கவிதையை பரிமாறி உங்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது உங்கள் அன்பின் வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்!

அம்மாவுக்கு


















வயக்காட்டுல மாமெங்காரங்க தொழி உளுக
கலப்ப மண்ண கிழித்தெடுக்க
நானோ சுத்துவரப்பு வெட்ட
நீயோ வீட்டுல மீன் கொழம்பு செஞ்சு
எல்லாருக்கும் கொடுத்து விட
மறுநாள் காலைல எனக்காக
ஒழுச்சு வச்சுருந்த பழைய மீன் கொழம்ப
எடுத்து வந்து ஊத்துரப்ப
அதுலயும் ரெண்டு மீன் துண்டு கெடக்குமே
அது எப்புடி ஆத்தா?

மீனு கொழம்புல செத்ததுக்கு அப்புறம்
குட்டி ஏதும் போடுமோ?

சில்வர் குண்டால அரிசி அருச்சு
களனி தண்ணில ரசம் வச்சு
ஆக்கி பொங்கி தருவாயே!

சீரக மணம் மூக்கு வழியா
மண்ட வரைக்கும் ஏறும்
புளித் துக்குக் தூக்கியடிக்கும்.
அதுமாறி வச்சு தர
இப்ப யாரு எனக்கிருக்கா?

நீ இறந்தது தெருஞ்சதும்
என் ஈரக்குழா வெடுச்சு போச்சே!

ஒரு ஈ காக்காக்கு கூட
நீ துரோகம் நெனச்சதில்லையே!
உன் உசுர எடுக்குறப்ப
எமனே தேம்பி தேம்பி அழுதுருப்பான்!

உன் உடம்ப விட்டு உசுரு
பிருஞ்சதும்,
உள்ளூரும் உறவுகளும் சேர்ந்தழுக
நாலு பேரு தூக்கிட்டு போய்
நந்தவனதுல வச்சு -உன்
தேகத்துக்கு தீ மூட்டினோமே!

ஒன்னோட சாம்பல கரைக்க
போனப்ப நம்மல பிரிச்ச இயற்கை
தான் செஞ்ச தப்ப உணர்ந்து
தன் கண்ணீர மழையா
கொட்டி அழுததே!

காவிரியே கதிகலங்கிப் போனதே!
களைவெட்டி கருதடுச்சு,குடும்பம் நடத்தி,
அதில் சிறுவாடு சேத்து
என்ன படிக்க வச்சவளே!

உன் தேகத்த விட்டு உசுரு பிருஞ்சாலும்
உன் புள்ளைக
உள்ளத்த விட்டு பிரியாத
மகராசிடி நீ!

பெத்த புள்ளைகளுக்காக உன் அண்ணன் தம்பிகிட்ட
போய் அழுதே காரியம் சாதுச்சவளே!

நீ போனதுக்கு அப்புறம் கூட
நான் நாதியத்து நிக்காம
உன் அண்ணன்தம்பிகள
விட்டு சென்ற உத்தமியே!

அதுக்கு அப்புறம் என் வாழ்க்கைல
அம்மா என்ற வார்த்தைய கூப்புட
வாய் தவிச்சப்ப,
என் நண்பர்களின் அம்மாக்க
மொகத்துல தெருஞ்சவளே!

நீ போனதுக்கு அப்புறம்
நீ வாழ்ந்த விட்டுக்கு போகாம
என் நண்பர்கள் வீடு தேடி
போகும் சூச்சமம் இதுதானோ?

ஒருத்தியா பாடுபட்டு படிக்க வச்சு
என்ன கரசேத்தவளே!
என் சம்பாத்தியத்துல
உனக்கு ஒருவாய் கஞ்சி
ஊத்த முடியாத பாவி ஆனேனே!

உன்ன என்ன விட்டு பிருச்ச
கடவுள வெறுத்த நாத்திகன் ஆனேனே!
பெத்ததுக்கு என்ன வளர்த்து
உன் கடமைய நெறவேத்திட்ட,
பெத்த கடன அடைக்க -நான்
நெனக்குரப்ப நீ போய் சேந்துட்ட.
அந்த கடன இந்த சென்மத்துல
நான் அடைக்க என் புள்ளையா
நீ பொறந்து
எனக்கொரு வாய்ப்பு குடு…..!