(இக்கவிதையின் கருத்தின் ஆழத்தை,
வார்த்தையின் வேகத்தை உணர முதலில்
சில ஆண்டுகளுக்கு முன்பு பயணப்பட வேண்டும்.
1915,இதோ பாரதி வாழ்ந்து கொண்டிருக்கிறான்)
சேவல் கூவும் வேளை
விடியுமே ஒரு காலை
கணவன் இழுப்பான் சேலை
காய்ச்சி கொடுக்கணும் பாலை
திரும்பி வருவான் மாலை
அமுக்கி விடணும் காலை
மறுத்தால் உரிப்பான் தோலை
இதுதானா பெண்ணின் வேலை?
எதிர்த்து கேட்டால் சூடு
அதுதான் பெண்ணின் பாடு
நித்தம் ஒருமுறை ஆசைப்பட்டு
கைநிறைய வண்ண வளையலிட்டு
உடுத்தும் அழகான காஞ்சிப்பட்டு
கணவன் மனைவிமேல் இஷ்டப்பட்டு
நெற்றியில் திலகமிடும் குங்குமப்பொட்டு
கணவன் இறந்ததும் கூச்சலிட்டு
சென்றிடுமே எல்லாம் அவளைவிட்டு
கணவனின் கடைசி விடை
சுடுகாட்டுக்கு செல்லும் நடை
இடுகாட்டுடன் பெண்ணிற்குத் தடை
துணிமணிகளை துவைக்க
வாழ்க்கை முழுவதும் சமைக்க
நித்தம் ஒருமுறை படுக்க
சிசுவை மட்டும் பெற்றெடுக்க
வேலைக்கு செல்லாமல் தடுக்க
பெண்ணின் திறமையை ஒடுக்க
திண்ணையை தாண்டாமல்
திட்டம் போட்டு
தீர்மானம் போட்டீர்களோ?
ஆணுக்கு நாடே வீடு
பெண்ணிற்கு வீடே நாடோ ?
வயதுக்கு வந்த பட்டு பாவாடை
வம்பிழுக்குமே ஆணின் கண்சாடை
ஆண் கண்டிடுவான் புதுவாடை
அப்பெண்ணின் கண்கள் நீரோடை
கன்னி கழித்தவன் மாசற்ற பாலாடை
கற்பிழந்தவள் ஏறிடுவாள் பாடை
இவன்களுக்கு கொடுத்தாலென்ன தூக்குமேடை?
உண்மையை உரைக்கிறேன் உள்ளபடி
கோவிலுக்கு செல்ல நல்லபடி
கோரிக்கை மனு தள்ளுபடி
மாதம் மூன்று நாட்கள்
கேட்டால் தீட்டாமாம்
அடேய்
ஆளும் ஆண் வர்க்கமே
அடிமை பெண் கேட்கிறேன்
உன்னை சுமந்தாளே மங்கை
அப்போது
மாதம் ஒருமுறை ஓடும் கங்கை
பத்துமாதம் காணாமல் போனது எங்கே?
வெளிவராத ஒட்டுமொத்த தீட்டு
உன் உடம்புதான் அதன் திட்டு
அதை மறந்து விட்டு
பெண்ணிற்கு போடாதே கால்கட்டு
ஆவதும் பெண்ணாலே
அழிவதும் பெண்ணாலே
என்று சொல்லி
பெண்ணை மணம் பூண்டவர்களே
பெண்ணை விலங்கிட்டு ஆண்டவர்களே
ஆசைக்கு அழகு பார்த்து
மீசைக்கு உழவு பார்த்து
பெண்மையை வர்ணித்த வாயெல்லாம்
பூட்டு போட்டுக் கொண்டதோ?
பெண்ணுரிமைக்காக
பரிந்து பேச-இப்
பாரத தேசத்தில்
பாரதி ஒருவன் மட்டும்தானா?
அடி அடிமைப்பட்ட பெண்ணே
கைகோர்த்து வீதிவாடி கண்ணே
நான் வழிநடத்துகிறேன் முன்னே
சுதந்திரம் கிடைக்குமடி பின்னே