இரசனை பசியோடு வந்த விருந்தாளிகளை வருக வருக வருக என்று வரவேற்று என்னுடைய கவிதையை பரிமாறி உங்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது உங்கள் அன்பின் வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்!

நம்ம ஊரு தெம்மாங்கு















   

(பெண்ணோடு சேர்த்து மண்ணையும் காதலிக்கும் ஒரு ஆண்     மகனின் குரல் இதோ வட்டார வழக்கை சுமந்து வருகிறது.)

தென்பாண்டி மண்ணைத்தானே
தெய்வமாக நெனச்சுக்கிட்டு 
தெனமும் வணங்கிக்கிட்டு 
தெம்மாங்கு பாடிவாறேன்

நாத்து நடத்தானே
நாத்தாங்காலு உழுதுக்கிட்டு 
நா(ன்) பாட வந்தேனய்யா
நம்மூரு தெம்மாங்கு

நாலு மொழம் வேட்டிகட்டி
நாத்துக்கெல்லாம் பாத்திகட்டி 
நானாக பாட போறேன் 
நம்மூரு தெம்மாங்கு

கொழுவு கோலமிட 
கொலுசு கொஞ்சம் சத்தமிட 
கொமரி கொல கேட்டு 
கொக்கு எல்லாம் பறந்திடுமே

மண்ணால வீடு கட்டி 
மாராப்பு இழுத்துக் கட்டி 
மானமுள்ள பொண்ணுதான
மாமன் பெத்த பெண்குயில்

அழகான வண்ணக்குயில் 
அக்கா பெத்த தங்கமயில் 
அச்சாரத்த போடத்தானே 
ஆசையோடு ஓடியாறேன்

நல்லதொரு மல்லிகைய 
நா(ன்) தேடி வாங்கிக்கிட்டு
நாரோடு சேத்துக்கட்டி 
நாளுமொழம் ஆக்கிக்கிட்டு
நடையா நடந்து வரேன் 
நந்தவனக் கிளியே

மதுரை எல்லாம் 
மணக்கும் மல்லி 
மாமன் சொன்னேன் 
மனசெல்லாம் சூடச் சொல்லி

தண்ணீ கொளத்தினிலே 
தவக்கா ஒன்னு சத்தமிட 
தாலி செஞ்சு வாறேனடி 
தாரமாக்க போறேனடி

கொல்லையில அர(ரை)ச்ச மஞ்ச 
கொசுவத்துல மணக்குமடி
கொஞ்சத்தான நா(ன்) வாறேன்
கொலுசு மணி வாங்கி தாறேன்

அந்திசாயும் நேரத்துல 
ஆடு மேச்சு வாரவளே 
அத்தான் ஒன்னு வச்சுருக்கேன் 
ஆச(சை)யோடு குடுக்கட்டுமா?

கருத்த முடி மேல 
கனகாமரம் வச்சுகிட்டு 
கனகவள்ளி நடந்துவர 
காடையெல்லாம் கத்துமடி

சீவி தல(லை) முடிஞ்சு 
சிங்காரிச்சு வாரவளே 
சித்தமெல்லாம் கலங்குதடி 
சிங்காரக்குயிலே 

வாழ்க்கையில வாக்குப்பட்டு
வக்கனையா சமச்சுக்கிட்டு
வாளியில எடுத்துக்கிட்டு 
வாய் நெறையா சிரிச்சுக்கிட்டு
வரப்போரம் வாரவளே 
வண்ண பூங்குயிலே 

வாய்க்கா தண்ணிதானே 
வயலெல்லாம் பாயட்டுமே
வாழை எல போட்டு 
வயிராற சாப்புடுவோம்

மொச்ச(சை) தானே உருச்சு வச்சு
மொளகா போட்டு அவுச்சாக்க 
மொரமாமன் நா(ன்) வந்து 
மொத்தமாக தின்னுடுவேன்

ஒலக்க புடுச்சு குத்துறத
ஒக்காந்து பாக்குறேனடி 
ஒனக்கு ஒடம்பு வலிக்குமே 
ஒத்தாச பண்ண வரட்டுமா?