இரசனை பசியோடு வந்த விருந்தாளிகளை வருக வருக வருக என்று வரவேற்று என்னுடைய கவிதையை பரிமாறி உங்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது உங்கள் அன்பின் வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்!

பத்து மைல் தூரத்தில்

















மாட்டுவண்டியில் சென்று,
தக்காளி விற்று,
திரும்பும் வேளையிலே,
மாட்டுச் சலங்கையின் மெட்டுக்கு
வரி போட்டு பாடியவன்- இதோ
பத்து மைல் தூரத்தில்!!! 

பெற்றோர்களால் வேறுபட்டோம்,
மதத்தால் வேறுபட்டோம்,
அன்பால் ஒன்றுபட்டோம்,
பொறாமைப் பட்டால் பொடனியில் அடித்து,
ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுத்தவனோ -இதோ
ஒன்பது மைல் தூரத்தில்!!!

தும்பைச் செடி பிடுங்கி,
அதிலே தட்டாம்பூச்சி பிடித்து
விளையாடி,
அன்பின் சின்னமாய்
எச்சிலைப் பரிமாறிக் கொண்ட
என் அருமை நண்பன் -இதோ
எட்டு மைல் தூரத்தில்!!!

ஒருமுறை சண்டையிட்டு -பின்
சமாதனம் பேசும்போது,
கடைசி வரையில் என்னுடன் இருப்பதாக
சத்தியம் செய்துவிட்டு,
என்னை ஏமாற்றிச் செல்கிறான்-இதோ
ஏழு மைல் தூரத்தில்!!!

மீசை முட்டும் பருவத்திலே,
நான் புகைச்சுருட்டைக் கொலை
செய்வதைத் தடுத்து,
அறிவுரை ஆற்றியவன் -இதோ
ஆறு மைல் தூரத்தில்!!!

குமரிக்குண்டு குளத்தினிலே,
நீச்சல் அடிக்க கற்றுக் கொடுத்து,
எனக்கு தண்ணீர் மேல் உள்ள
ஐயத்தை நீக்கியவன்-இதோ
ஐந்து மைல் தூரத்தில்!!!

என் உணர்வுக்கு மதிப்பளித்து,
உள்ளத்தைப் புரிந்துகொண்ட
நண்பன் செத்துக்கிடக்கிறான்-இதோ
நான்கு மைல் தூரத்தில்!!!

அறியாத வயதினிலே,
மாமன்மகள் கன்னத்தைக் கிள்ளி,
எண்ணத்தைச் சொல்லி,
செருப்படி பட்ட-தன்
மூடத்தனத்தை சொல்லிச் சிரித்தவன்-இதோ
மூன்று மைல் தூரத்தில்!!!

நான் ஏர்பிடித்து உழும் வேளையிலே,
வெளியே மெல்லச் சிரிக்கும்
கொட்டிக்கிழங்குகளைச் சேகரித்து,
சுட்டுக் கொடுத்து,
எனது பசியை ஆற்றி,
இளைப்பாறச் செய்தவன்-இதோ
இரண்டு மைல் தூரத்தில்!!!

வறுமையின் பிடியில் சிக்கியும் அழுததில்லை!
உன் அன்பின் பிடியில் சிக்கி,
உன் உயிரற்ற தேகத்தைப் பார்க்க,
ஓலமிட்டு ஒப்பாரி வைத்து வருகிறேன்-இதோ
ஒரு மைல் தூரத்தில்!!!

இதோ வந்துவிட்டேன்.
எனது நண்பனைக் கண்டுவிட்டேன்.
முதல்முறை என்னைப் பார்த்து,
பேசாமல் கண்மூடிய நிலையில்
இருக்கிறான்,
எனது அமைதிப் பூங்கா….!!!!