புகழ் உணர்ச்சியின்
உச்சத்தை அடையச்செய்யும்!
மகிழ்ச்சி வெள்ளத்தை
பெருகச் செய்யும்!
எனக்கும் புகழ் வேண்டுமென
ஆசைதான்
குளித்தவுடன் காது மடலில்
ஒட்டியிருக்கும் சலவைக்கார நுரைபோல
ஒரு ஓரத்தில்!
அரசனாய் பிறந்திருந்தால்
புலவர்களால் புகழப்பட்டிருப்பேன்!
என்ன செய்வேன் இப்போது
என் புகழைப் பாட
என்னை விட்டால் யார் உண்டு?
புகழுக்கு இயற்கையும்
ஏங்கித்தான் இருக்கிறது போலும்
என்னை எழுத சொல்லி!
என் வீட்டுச் செடியில்
இருக்கும் பூக்களும்
என்னை பார்த்து
பல்லைக் காட்டத்தான் செய்கிறது
தன்னை வாழ்த்தச் சொல்லி!
வாசலில் புகழச் சொல்லி
புழுதியும் அழுது புரளுகிறது!
தண்ணீர்ப் பூக்களை
அதன்மேல் வீசியதும்
ஆனந்தத்தில் அடங்கிவிடுகிறது!
மரத்தைப் புகழுகிறேன்!
மழையில் நனைந்து
மகிழ்ச்சியில்
தண்ணீர் சொட்ட நிற்கிறது
தன்னை மறந்து!
தலையைக் கோதிக்
கொடுத்துக் கொண்டே
புகழ்ந்தேன்!
பாவம்! சொக்கித்தான்
போனாள் போலும்!
கரங்களால் முகத்தை
முடிக்கொண்டாள்
தொட்டாசிணுங்கி!
டேய்..!
என்னை மட்டும் மறந்துவிட்டாயா..?
என்று கோபித்துக் கொண்டு
செல்லும் மேகம்!
பாவம் கண்ணீர் வடிக்கிறான்
மழையாக!
நனைத்தேன்!
மறுநாள் மூக்கு கிணற்றில்
ஊற்று சுரக்கிறது….!