எனது வாழ்க்கை ஏணியில்
ஆணி அடித்தவர்களே
எமது எண்ணச் சுவற்றில்
எச்சில் துப்பியவர்களே
மூச்சுக்கும் கூட
முடக்குப் போட்ட
முன்னேற்றத்தின்
முட்டுக் கட்டைகளே
மது போதையில்
எம்மை விவாதப் பொருளாக்கி
வாய் வயலுக்கு
வாய்க்கால் அமைத்து
நீர் பாய்ச்சியவர்களே
சுயநலம் துறந்து
பொது நலம் பூண்டு
லட்சியக் கோட்டையை
வட்டமிடும் காக்கையை
சுட்டுவிட துடித்தவர்களே
பகல் முழுவதும்
பல்லிழித்து பேசி
படுக்கும் போது
பரிகாசம் பேசிய
பச்சோந்திகளே
மண்ணைக் கல்லாக்கி
புல்லைப் புண்ணாக்கி
விளையாட்டை வினையாக்கி
விவகாரம் பேசிய திருவாய்களே
காக்கத்தான் வாக்களித்து
காரியம் முடிந்ததும்
காணாமல் போனவர்களே
வரலாற்றை நான் தேட
வம்பிழுக்கும் தொனியோடு
வசவு கீதம் பாடியவர்களே
உங்களை எல்லாம்
திருப்பு அடிப்பேன்
எனது உதட்டோர
புன்னகையால்