இலட்சக்கணக்கில்
இனமழிந்து போனால்
நான் என்ன செய்வேன்?
இனிதே உண்டு
இன்புற்றிருப்பேன்
இனத்தை காக்க
போரென வந்தால்
நான் என்ன செய்வேன்?
எம்மினத்தை காட்டி கொடுத்து
என்னுயிர் காப்பேன்
ஒற்றுமை நம்மில்
ஓங்கி ஒலிப்பின்
நான் என்ன செய்வேன்?
ஒற்றர்களை விட்டு
ஓரவஞ்சகம் செய்வேன்
கஞ்சிக்கு வழியில்லாதவர்களின்
காட்சியை கண்டால்
நான் என்ன செய்வேன்?
காதல் கொண்டு
காமம் கண்டு
களைப்புற்றிருப்பேன்
வயதானவர்கள் பலர்
வக்கற்றுக் கிடந்தால்
நான் என்ன செய்வேன்?
வாங்கி குடித்து
வாந்தி எடுப்பேன்
சாலையில் ஒருவன்
அடிபட்டு கிடந்தால்
நான் என்ன செய்வேன்?
வேடிக்கை பார்த்து
வேலைக்குச் செல்வேன்
அனாதைகளென குழந்தைகள்
அதிகமிருந்தால்
நான் என்ன செய்வேன்?
அரசு உண்டு
பார்த்துக் கொள்ளுமென
ஆடிக் கழிப்பேன்
ஊரே தீயில்
பற்றி எரிந்தால்
நான் என்ன செய்வேன்?
ஊமையாய் இருந்து
உறங்கி கிடப்பேன்
பலபேர் இங்கு
பிச்சை கேட்டு வந்தால்
நான் என்ன செய்வேன்?
உதட்டை பிதுக்கி
ஓரம் செல்வேன்
தமிழன் வரலாறு
தொலைக்கப்பட்டால்
நான் என்ன செய்வேன்?
தொலைக்காட்சி பார்த்து
தூங்கிக் கழிப்பேன்
தமிழ் மொழியுனது
தாய்மொழியெடா என்றுரைத்தால்
நான் என்ன செய்வேன்?
அடச்சீ போடவெனவே
அடுத்தவன் மொழியை கற்பேன்
