இரசனை பசியோடு வந்த விருந்தாளிகளை வருக வருக வருக என்று வரவேற்று என்னுடைய கவிதையை பரிமாறி உங்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது உங்கள் அன்பின் வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்!

முரண்டு பிடிக்குதே மூக்கு


















மழையும் மண்ணும்
கலக்கும் போது
மயக்கும் நல்ல
மன்மத வாசனை வேண்டுமே!

புரட்டாசி மாதம்
புழுதி காட்டினிலே
பூ பிஞ்சோடு கலந்து வரும்
மொச்சை கொடியின்
வாசனை வேண்டுமே!

மாடுகளைப் பூட்டி உழுது
நிலத்தைச் சீராக்கி
மண்ணைச் சேறாக்கி
கொக்கைக் கொள்ளையிடும்
வாசனை வேண்டுமே!

திருவிழா நாட்களில்
ஒருவித கவர்ந்திழுக்கும்
தோரணையோடு தொங்கும்
தோரணங்களின் வாசனை வேண்டுமே!

கதிரடித்த இரண்டாம் நாள்
கலைக்கப்படும் போரிலிருந்து
கக்கும் கனலோடு
கமகமவென வரும்
புல்லின் வாசனை வேண்டுமே!

பங்குனி மாதத்தில்
பருவமடைந்து
சித்திரை மாதத்தில்
சிலுத்துக் கொள்ளும்
மாங்காய் காம்பு கறக்கும்
பாலின் வாசனை வேண்டுமே!

ஓடுகாலிக் காற்றோடு சேர்ந்து
ஊரெல்லாம் வம்பிழுத்து
பயணப்பட்டு வரும்
பனைம்பழத்தின் வாசனை வேண்டுமே!

பருவப் பெண்ணாய்
பதிப்பகத்தில் பதிக்கப்பட்டு
புதிய தோரணையோடு வரும்
புத்தகத்தின் வாசனை வேண்டுமே!

குவித்த உணவோடு
அள்ளித்தான் உண்ண
வம்பிழுக்கும் தொனியோடு வரும்
வாழையிலை வாசனை வேண்டுமே!

மண்ணுக்குள் மறைந்திருந்து
வெக்கப்பட்டு வெளிவரும்
வெட்டி வேரின்
வாசனை வேண்டுமே!

வஞ்சம் தீர்க்கத்தான்
கொலை செய்தவனுக்கே
கண்ணீர் வரச் செய்யும்
வெங்காய வாசனை வேண்டுமே!

குளித்த தலையோடு
குமரிப்பெண் நடந்து வர
கும்மென்று வரும்
கூந்தலின் வாசனை வேண்டுமே!