இரசனை பசியோடு வந்த விருந்தாளிகளை வருக வருக வருக என்று வரவேற்று என்னுடைய கவிதையை பரிமாறி உங்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது உங்கள் அன்பின் வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்!

எனது கிறுக்கல்


















இது என்ன?
எனது உடலிலும் உள்ளத்திலும்
ஏதோ ஒரு மாற்றம்!
காமமா? காதலா?
கடவுள் பக்தியா?  

இல்லை! இல்லை!
ஏதோ வார்த்தைகள் வெளிவர துடிக்கிறதே!
ஏதோ கிறுக்கத் தோன்றுகிறதே!
மனதில் வார்த்தைகள் பிறக்கிறதே!
அதைக் கோர்க்க எழுதுகோல் மறுக்கிறதே!

அது சரி,
இத்தனை நாட்கள் எனது எழுதுகோல்
கர்பமாக இருந்தது போலும்!
இப்போது பிரசவ வலியில் துடிக்கிறதே!
வார்த்தைகளை பெற்றுப் போடுகிறதே!

எழுதினேன் தோன்றுவதையெல்லாம்
மனதிலிருந்து எழுதுகோல் வழியே!

எழுதுவது என்னைப்
பின்நோக்கி பயணப்படச் செய்கிறது!
இயற்கையோடு நான் நடத்திய
குடித்தனத்தை நினைவுப் படுத்துகிறது!

குழந்தைக்கோ அம்மாவின் பெயர்
முக்கியமில்லை!
அம்மாதான் முக்கியம்!
அது போல
எனக்கோ எனது எழுத்துக்களின்
அங்கீகாரம் முக்கியமில்லை!
எழுதுவதுதான் முக்கியம்!

பூக்களின் மணத்தை எடுத்துச் செல்லும்
உரிமையோ காற்றுக்கு!
அது போல
எனது கிறுக்கல்களை எடுத்துச் செல்லும்
உரிமையோ பலருக்கு!

எனது கிறுக்கல்களை படித்தவர்களோ,
“கவிதை அருமை” என்றார்கள்!
யாருக்குத் தெரியும்?
அவையெல்லாம் எனது அழுகையில்
முளைத்த ஒப்பாரி வரிகள் என்று!

எழுதும் போது எழுதுகோலும்
நானும் சேர்ந்தழுதோம்!
எழுதுகோலின் கண்ணீரைத் துடைக்க
காகிதம் இருந்தது!
ஆனால் எழுதியவனின்
கண்ணீரைத் துடைக்க………….???