இரசனை பசியோடு வந்த விருந்தாளிகளை வருக வருக வருக என்று வரவேற்று என்னுடைய கவிதையை பரிமாறி உங்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது உங்கள் அன்பின் வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்!

உறங்கிக் கொண்டுதானிருந்தேன்















வீசிய குண்டு மழையில்
எங்கள் இளம்பயிர்கள்
அழிந்துதான் போயின.
ஆமாம்! அப்போது
ஆழ்ந்துறங்கிக் கொண்டுதானிருந்தேன்

வீசிய போர்ப் புயலில்
எங்கள் மரங்களெல்லாம்
வேரோடு சாய்ந்தன
படகெல்லாம் கவிழ்ந்துதான் போயின
ஆமாம்! அப்போது
ஆழ்ந்துறங்கிக் கொண்டுதானிருந்தேன்

பூவென்றும் பார்க்கவில்லை
கசக்கி எறிந்தான் சிங்களன்
பிஞ்சென்றும் பார்க்கவில்லை
தின்று சுவைத்தான் சிங்களன்
ஆழ்மனம் துடிக்கவில்லை
அடிவயிறும் கொதிக்கவில்லை
ஆமாம்! அப்போது
ஆழ்ந்துறங்கிக் கொண்டுதானிருந்தேன்

தடைசெய்யப்பட்ட இரசாயணகுண்டுகள்
தமிழவு டலைப் பதம் பார்த்தது.
வேடிக்கை பார்த்து மகிழ்ந்தனர்
கொடுத்தனுப்பிய நாடுகள்
ஆமாம்! அப்போது
ஆழ்ந்துறங்கிக் கொண்டுதானிருந்தேன்

குண்டுகள் விளையாடி மகிழ்ந்த
தமிழர் உடல்கள் குவிக்கப்பட்டன
இனமே சேர்ந்து ஈழமண்ணில்
மரண ஓலத்தை எழுப்பியது
அதுவோ என் காதில்
வந்து பாயும் தாலாட்டாய்
ஆமாம்! அப்போது
ஆழ்ந்துறங்கிக் கொண்டுதானிருந்தேன்

ஊடகங்களெல்லாம் ஊமைகள்
பொழுதை கழிப்பதற்கோ கூத்தாட்டிகள்
போதாக்குறைக்கு என் காதும் செவிடு
இனமே சேர்ந்து கத்தி
அலரித்துடித்தாலும் எனக்கெப்படி கேட்கும்?
ஆமாம்! அப்போது
ஆழ்ந்துறங்கிக் கொண்டுதானிருந்தேன்

திருவாளர் பரிசுத்தனமென்று
தம்பட்டம் அடித்துக்கொண்டவன் -பின்
திருட்டிப் பயலென போஃபோர்சில்
பட்டமெடுத்தவன் ஈழத்திற்கு
அமைதிப் படையெனும் அரக்கனை
அனுப்பி அட்டூழியம் செய்தானே
ஆமாம்! அப்போதும்
ஆழ்ந்துறங்கிக் கொண்டுதானிருந்தேன்

சிங்களத்துடன் கைகோர்த்து
எங்குலத்தோர் அழிய
உதவிய நாடுகளுள்
இந்தியாவே முதன்மை பெற்றது
ஆயினும் என்ன செய்வேன்?
வீதியிறங்கிப் போராட மறுத்தேன்
இந்திய அடிமை வாழ்வை இரசித்தேன்
ஆமாம்! அப்போது
ஆழ்ந்துறங்கிக் கொண்டுதானிருந்தேன்