இரசனை பசியோடு வந்த விருந்தாளிகளை வருக வருக வருக என்று வரவேற்று என்னுடைய கவிதையை பரிமாறி உங்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது உங்கள் அன்பின் வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்!

அந்த மூன்று நாட்கள்

















மஞ்சனத்தி மரமெல்லாம்
மாவிலை தோரணம்…
குறுக்கும் நெடுக்கும்
கட்டப்பட்ட
வண்ணக் காகிதங்கள்…
இரவெல்லாம்
இந்திரலோகத்தைப் போல
அலங்கரிக்கும் மின்சார விளக்குகள்…

சேர்த்து வைத்த கோலங்களில்
தேர்தெடுத்து ஒன்று போட்டு
வாசலை
வடிவமைக்கும்
நாட்கள் அது…!!

உச்சந்தலையில் எண்ணெய் இட்டு
சந்தையில் வாங்கி வந்த
சீயாக்காய் அரைத்து
தேய்த்துக் குளித்து
புத்தாடை அணியும்
நாட்கள் அது…!!

வக்கணையாய்ச் சமைத்து வைத்து
வாசலில் செல்வோரை எல்லாம்
வழிமறித்து
வயிற்றை நிரப்பும்
நாட்கள் அது…!!

கடினப்பட்டு சேர்த்து வைத்த
சிறுவாட்டில்
கறிக்குழம்பு செய்து வைத்து
ஆசைப்பட்டுப் பரிமாறும்
நாட்கள் அது…!!

குடும்பப் பெண்களெல்லாம்
உச்சி வகுடெடுத்து
நெற்றியில் திலகமிட்டு
உலக அழகிகளைப் போல
மினிக்கிக் கொண்டு
உறவுகளுடன்
உறவாடிக் கொள்ளும்
நாட்கள் அது…!!

நித்தமும் ஒருமுறை
நித்திரையில்
நினைத்து வந்த
நினைவுகளை
நிம்மதியாக
இளைப்பாறும்
நாட்கள் அது…!!

கண் சிமிட்டி
கடைக்கண்ணால் பேசிக்கொள்ளும்
காதலர்களெல்லாம்
கட்டவிழ்த்து விட்ட மாடுகள்தான்
அந்த நாட்களில்…!!

சிலுத்துக் கொண்டுபோகும்
சீதைகளைப் பார்த்தால்
சில்லரையெல்லாம் வெளிவருமே
இராமர்களுக்கு
அந்த நாட்களில்…!!

மஞ்சள் நீர் ஊற்றும் போது
மாமனைக் கண்டால்
மல்லிகைப்பூச் சூடும்
மங்கையர்களுக்கெல்லாம்
வாய் நிறையச் சிரிப்புதான்
அந்த நாட்களில்…!!

மந்தை கடையினிலே
மாமன் வாங்கித் தந்த
மல்லிகையை
மனசெல்லாம் சூடிக்கொண்டு
மன்மதபடலம் நடத்தும்
நாட்கள் அது…!!

கடைசியாக
கள்ளிக் கொடிதனிலே
காதலர்கள் தம் பெயர்களை
இதயத்தோடு சேரத்தெழுதி
இப்போது
இதமாக வருடிப்பார்க்கும்
நாட்கள் அது…!!

கொம்பால் குத்துப்பட்டு
காலால் இடரப்பட்டு
வீரமண்ணுக்கு முத்தமிட்டு
சல்லிக்கட்டு நடத்தும்
நாட்கள் அது…!!

சூரியனைத் துடைத்தெறிந்து
தூக்கத்தை மூட்டைகட்டி
குத்த வைத்து கொண்டே
கூத்துப் பார்க்கும்
நாட்கள் அது…!!

முளைக்க வைத்த
முளைப்பாரியை
சுற்றி வட்டமிட்டு
கும்மி பாட்டிசைத்து
அலுங்காமல் எடுத்து சென்று
ஆற்றில் கரைக்கும்
நாட்கள் அது…!!

கரைத்த புளித்தண்ணீரில்
கருப்பட்டி சுக்கு சேர்த்து
செய்து வைத்த
பானகத்தை
பருகிக்கொள்ளும்
நாட்கள் அது…!!

புடைத்து இடித்து பிடித்த
மாவிளக்கில் சிறுதுண்டம்
இரண்டு வாழைப்பழம்
கொப்பரைத் தேங்காயில் அரைமுடி
இவற்றோடு வெற்றிலைபாக்கு
மஞ்சள் பையில் வைத்து
உறவுகளுக்குக் கொடுத்தனுப்பும்
நாட்கள் அது…!!

இந்த ஆசைகளெல்லாம்
ஓராண்டுக்கு ஒருமுறை வரும்
மூன்றுநாள் திருவிழாதான்
அந்த நாட்கள்…..!!!!