இரசனை பசியோடு வந்த விருந்தாளிகளை வருக வருக வருக என்று வரவேற்று என்னுடைய கவிதையை பரிமாறி உங்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது உங்கள் அன்பின் வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்!

காதல் என்னை காதலிக்கவில்லை


















காதல்!
வேப்பங்காயில் தேன் பிழிய
துடிப்பது.
அரளிக்காயில் 
அமிர்தம் செய்ய 
முனைவது.

இரவில்
ஆந்தை போல்
கண் விழித்து 
போர்வைக்குள் நொச்சு கொட்டி
பேசச் சொல்லும்.

உப்பு சப்பில்லாத 
பேச்சுத்தான்
ஆனால் அதற்கு ருசி 
அதிகம் 

உதடுகள் கதவைத் திறக்காமல் 
உதிர்க்கின்ற 
"உம்" என்ற சொல்லுக்கு 
ஆயிரம் அர்த்தம் 
விளங்கும் 

கண்கள் நான்கும் உறவாடி 
சித்தத்தைச் சூடேற்றி
உடம்பை உசுப்பேற்றி 
உருக்குலைய வைக்கும் 
காதல் 

முத்தத்தால் 
முச்சுக் காற்றே 
முகத்தில் பயணப்படும்

பரிமாறி கொள்ளப்படும் எச்சிலால் 
நரம்பு முழுவதும் 
ஜீவ நதி பாய்ந்து 
உடம்பை முறுக்கேற்றும் 

காரணமில்லா சண்டைகளும் 
செல்லக் கோபங்களும் 
காணக் கிடைக்கும் 
காதலில் 

காதல் செய்யும் 
கோமாளித்தனமும் 
பம்மாத்து வேலைகளும் 
ஒருவிதக் குதூகலம்தான் 

கண் மூடாமல் 
கனவு வரும் 
கனவில் காதல் 
பவனி வரும் 

காதலித்தால் 
எருக்கம் பூவிலும் 
தேன் சுரக்கும்
மலட்டு மேகங்களும் 
மழை பெய்யும் 
தென்றல் காற்றும்
வலிமை பெறும்

காதலித்தால் 
ஆணுக்கும் வெட்கம் வரும்
பெண்ணுக்கும் வீரம் வரும் 

காதலியுங்கள்-அத்துடன் 
கண்ணீருக்கும் வாக்கப்படுங்கள் 
அழும் சுகம் கூட 
தனிச் சுகம் தான்
காதலித்தால்...