இரசனை பசியோடு வந்த விருந்தாளிகளை வருக வருக வருக என்று வரவேற்று என்னுடைய கவிதையை பரிமாறி உங்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது உங்கள் அன்பின் வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்!

மன்னித்து விடு


















பூத்துக் குலுங்கிய 
தும்பைச் செடிகளே-உங்களுக்கு 
துன்பம் இழைத்து 
தேன் சந்தோசத்தை 
திருடிச் சென்ற 
வண்ணத்துப் பூச்சி நான் 
என்னை மன்னித்து விடுங்கள்

வீட்டுக்கு விருந்தளிக்க 
அழைத்த 
ஒரு மரத்துக்கிளிகளே
உங்களுக்குள் சண்டை மூட்டி 
கூண்டில் அடைத்த 
இந்த ஒற்றனை
மன்னித்து விடுங்கள் 

மழையிலும் கொழுந்துவிட்டு 
எரியும் பாசத் தீபங்களே
உங்களை கட்டி அணைக்க 
காற்றாய் வந்தேன்...
என் பாசத் தவிப்பில் 
அணைந்து விடுவீர்கள் 
என்பதை மறந்து...
என்னை மன்னித்து விடுங்கள்

புன்னகையை குவித்து 
வரவழைத்து 
வரவேற்ற உதடுகளே 
உங்களைப் புலம்பச் செய்துவிட்டேன் 
என்னை மன்னித்து விடுங்கள் 

சாப்பிடும் போது பாசப்பசியை 
இடைமறிக்கும் வியர்வையுடன் 
தென்றலைப் போரிட 
அழைக்கும் மயில் இறகுகளே 
அதைப் பிடித்து வீசும் கரங்களே 
உங்களைக் காயப்படுத்தி விட்டேன் 
என்னை மன்னித்து விடுங்கள்

மகிழ்ச்சி என்ற வார்த்தைக்கு 
ஆயிரம் அர்த்தம் உணர்த்தி 
வேண்டியதை 
வேண்டாமலே அளித்த தெய்வமே 
வேதனைப் படுத்தி விட்டேன் 
என்னை மன்னித்து விடுங்கள்

கோடையிலும் குறையாத 
பாசத்தின் வற்றா ஊற்றே
உன் கண்களில் 
கை விரல் வைத்தவனை 
மன்னித்து விடுங்கள்

எத்திசையில் நின்று பார்த்தாலும் 
என்னை மட்டுமே பார்த்த 
சுவற்றில் இணைந்த படங்களே 
நம் கண்களை ஒட்டவிடும்
தருணம் இனி அமையாது 
என்னை மன்னித்து விடுங்கள்

குற்ற உணர்ச்சி 
கட்டாந்தரை இதயத்தையும் உழுது 
கண்ணீர் ஊற்றை 
சுரக்கச் செய்கிறதே

கவிஞனின் எழுத்து
காகிதத்தில் மட்டுமல்லடி 
கண்ணீருடனும் தான் 
என்னை மன்னித்து விடு