இரசனை பசியோடு வந்த விருந்தாளிகளை வருக வருக வருக என்று வரவேற்று என்னுடைய கவிதையை பரிமாறி உங்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது உங்கள் அன்பின் வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்!

தவிப்பு

















உருமா தலயோட
உழுத கொழுவோட
உளுந்த வடையோட 
ஊரு பக்கமா வாறேனடி

ஒலக்க புடுச்சு குத்துறத
ஒக்காந்து பாக்கட்டுமா
ஓரங்கட்டி நிக்கட்டுமா
ஒத்தாச பண்ணட்டுமா

ஏந்திய முள்ளோட
எட்டுவச்சு வாரவளே!
எந்துருச்சு வந்து
எந்தோளில் சொமக்கட்டுமா?

தட்டு பழத்தோட
தாம்பாழ தட்டோட
தாம்பூலம் மாத்தத்தான்
தாய்மாமே வாறேனடி

உள்ளுக்குள்ள ஆசயிருந்தா
உள்ளத்துல எடம் குடுத்தா
ஊரறிய தாலிகட்டி
உல்லாசம் கண்டிடலாம்

சிங்கார கொண்டையிட்டு
சிலுத்துக் கொண்டு போறவளே!
சிறுமீச துடிக்குதடி
சித்தமெல்லாம் கலங்குதடி

சவுக்கு மரத்தோட
சவடால் பேசியவளே!
சறுக்கி வெளையாட
சந்தர்ப்பம் எப்போது?

அந்தசாயும் நேரத்துல
ஆடுகள மேய்ப்பவளே!
ஆடிக் காத்தோட
ஆடிக் களிப்பது எப்போது?

ஆத்தோரமா வீடு கட்டி
ஆரேழு பருக்கைகள
அஞ்சு விரல் கூட்டி
அல்லி நீ ஊட்டி
அந்த சொகம் கிட்டிடுமா?

கொளத்து கரையோரம்
கொலுசு கத்தலோட
கோரப் பசியோட
கொத்தி திண்ணட்டுமா?

பஞ்சார கூட்டுக்குள்ள
படுத்துறங்கும் கோழி தானே
பம்மாத்து பண்ணும் சேவல் நானே
பகல் கூத்து பண்ணலாமோ?

ஓடக் கரையோட
ஒன்னோட நானாட
ஒழவுக் காத்தாட
ஒம்மேனி நோகிடுமோ?

எழுதிய பரீச்சைக்கு
எருக்கம் பூ வெடிச்சவளே!
எழுத்தறவு வேண்டுமடி
என்னாச தீருமடி

மரிக்கொழுந்து ஒடம்பிருக்க
மடியோடு தலையிருக்க
மல்லாந்த கனவோட
மாமேன் கொஞ்சம் ஏங்குறேனடி

இரவ இழுத்தடிக்க
இருட்ட நாமணைக்க
இடுப்ப கைபிடிக்க
இழுப்ப மரமிருக்க
இழுச்சுக்கிட்டு காத்திருக்கேன்

நட்ட கொடி பூத்திடுமோ
நக்கலாக பேசிடுமோ
நட்டுக்கல்லா நானிருக்க
நாலு பக்க சொவரெல்லாம்
நாதியத்து போயிடுமோ?

வேக்கானம் பேசுறவளே!
வெவகாரம் வேண்டாமடி
வெந்த புண்ணுக்குத்தான்
வேலுக் கம்பு பாச்சாதடி

வஞ்சர மீனுக்கும்
வக்காலத்து வாங்கியவளே!
வழுக்க தலயில்ல
வழிய நா(ன்) வாறேன்
வலிய குடுத்துப்புட்டு
வராம போகலாமா?